சுமார் 45 முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் ராயபுரம் அருகே மலக்கழிவு கலந்த தண்ணீர் குடிநீர் குழாயில் வருவதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ராயபுரம் அடுத்த சின்னா நகர் பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மலக்கழிவு தண்ணீர் கலந்து குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதால் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல், சுமார் 45 முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மலம் கலந்த தண்ணீரை விநியோகம் செய்ததால் ஆத்திரமடைந்த சின்னா நகர் பகுதி மக்கள் ராயபுரம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் இருந்து அப்பகுதி மக்களை கலைந்து செல்ல செய்தனர்.