கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்க நேரிடும் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஆண் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை காட்டெருமை கொம்புகளால் தூக்கி வீசி, தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, சிறு காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பினர்.
காட்டெருமை தாக்குவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். காட்டெருமை தாக்கிய நபரை, குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், கரடி, சிறுத்தை புலி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்க நேரிடும் என்பதால், வனத்துறையினர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.