கோவையில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழந்த சம்பவம்; இரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் வனத்துறையினர் விசாரணை..!

மேலும், சென்னை செல்லும் இரயில் என்பதால் யானை மீது மோதிய எஞ்சினை பறிமுதல் செய்துவிட்டு, பயணிகள் நலன் கருதி வேறு எஞ்சினுடன் வண்டி அனுப்பி வைக்கப்பட்டது.



கோவை: கோவை அருகே ரயில் மோதியதில் 2 குட்டி யானை உட்பட 3 பெண் யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் இரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழக - கேரள எல்லையான நவக்கரை அருகே ரயில் பாதை ஒன்று உள்ளது. கேரளாவிலிருந்து ரயில்கள் இந்த பாதை வழியாக தமிழகத்திற்குச் சென்று வருகின்றன. 

இந்நிலையில், நேற்று மாலை மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதையில் வந்து கொண்டிருந்தது. வாளையாறை கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இருப்பினும், ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதிவேகத்தில் வந்த ரயில், 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டன. இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 

இது குறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, அப்பாதையில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து யானைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

வனத்துறையினர் முதற்கட்ட விசாரணையில் இரயில் ஓட்டுநர் சுபயர் மற்றும் உதவியாளர் அகிலிடம் வாளையாரில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், சென்னை செல்லும் இரயில் என்பதால் யானை மீது மோதிய எஞ்சினை பறிமுதல் செய்துவிட்டு, பயணிகள் நலன் கருதி வேறு எஞ்சினுடன் வண்டி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ரயில் 1 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. 

கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. 

குறிப்பாக, யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால், ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்த பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மீண்டும் அதிவேகத்தில் ரயில்களை இயக்க அனுமதித்த ரயில்வே துறையை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். 

மேலும், யானைகள் கடப்பது வாடிக்கையாக இருப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையையும் வனத்துறையினர் அலட்சியப்படுத்தியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்து 3 பேருயிர்கள் இன்னுயிரை இழந்துள்ளதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து இருமாநில அரசுகளும், ரயில்வே துறையும் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே, இறந்த பெண் யானையை பிரேதப் பரிசோதனை செய்த போது யானை கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது. பெண் யானையின் வயிற்றில் 3 மாத கரு இருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

இதே பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வனப்பகுதி வழியாக செல்லும் அதிவேக ரயில்களில் அடிபட்டு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 யானைகள் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...