சமீப காலங்களில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆப்பிள் ரசம், ஆப்பிள் பச்சடி என்று செய்யும் அளவிற்கு தக்காளி எட்டாக்கனியாகி விட்டது என முதலமைச்சருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம் எழுதியுள்ளனர்.
கோவை: சமீப காலங்களில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆப்பிள் ரசம், ஆப்பிள் பச்சடி என்று செய்யும் அளவிற்கு தக்காளி எட்டாக்கனியாகி விட்டது என முதலமைச்சருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் துடிப்போடு மக்கள் நம்பிக்கையே முழு மூச்சாக எண்ணி பல முன்னணி விஷயங்களை மேற்கொண்டு பாமர ஜனங்களுக்காக அயராது உழைப்பதை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.
சமீபகாலமாக கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற பொருட்களின் விலை விண்ணைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் பெட்ரோல், டீசல் போன்றவைகளை ஒரு காரணமாக கூறினாலும் காய்கறி விலையும் ராக்கெட் வேகத்தில் ஏறிய வண்ணமே இருக்கின்றது.
சென்ற ஆண்டிற்கும் அதற்கு முந்தைய ஆண்டிற்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் மயக்கம் அடையாதவர்கள் யாருமே இல்லை என்று கூறலாம்.
பொருட்களின்விலைப்பட்டியல்:-
அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. பல வியாபாரிகள் மற்றும் சிறு கடைகளில், அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை பட்டியல் போட்டு அறிவிப்பதும் இல்லை, பொருட்களின் விலைப்பட்டியலை தனித்தனியாக பாமர மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதும் இல்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களுடைய மால்களிலும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் விலைப்பட்டியலை ஆங்காங்கே சிறியதாக வைத்து நுகர்வோருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக சிறு கடைகளிலும் மளிகை கடைகளிலும் இதை பின்பற்றுவதே இல்லை. இது சட்டத்திற்கு எதிரானதாகும். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் பார்வைக்கு அத்தியாவசிய பொருட்களின் பட்டியலை வெளியிட வேண்டும். தினந்தோறும்விலைப்பட்டியலை வெளிக்கொணர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
எட்டாக்கனியாகி விட்டது தக்காளி:-
இது ஒருபுறமிருக்க சமீப காலங்களில் தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆப்பிள் ரசம், ஆப்பிள் பச்சடி என்று செய்யும் அளவிற்கு தக்காளி எட்டாக்கனியாகி விட்டது. இதில் வேதனைக்குரிய விஷயம் நுகர்வோருக்கு 110 ரூபாய், 160 ரூபாய் என்று விற்கப்படும் தக்காளியை விவசாயிகளிடம் இருந்து 60/90 ரூபாய் என்ற விலையில் தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
விவசாய சங்கங்களும் நாங்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவது, உழவர் சந்தையிலும் காய்கறி, பழ கடைகளிலும் இரட்டை விதமாக, நோட்டீஸ் போர்டில் விலையை நிர்ணயித்து மோசடிகள் செய்கின்றனர். சில சந்தை அதிகாரிகள் சுய நல நோக்கத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.
இதை பலமுறை நுகர்வோர் அமைப்பாகிய நாங்களும் விவசாயிகளுடைய சங்கங்களும் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் ஒன்றாக குரல் கொடுத்து வந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு சமாளிப்புகளை தவிர விமோசனம் கிடைப்பதில்லை.
இதற்கு நேர்மையற்ற ஊழல் பெருச்சாளிகள் அதிகமாக இடம் பெறுவதால் நல்ல அடிமட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் மக்களுக்கு நேர்மையாக பணி புரிய இயலவில்லை.
உழவர்சந்தையின் முக்கிய நோக்கம்:-
விவசாய சந்தையின் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும், நுகர்வோருக்கு நல்ல பொருள் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதற்கு முன்னதாக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த விவசாயசந்தையை பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாக துவங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஆனால் தற்போது இந்த சந்தைகள் ஊழல் அதிகாரிகளிடமும் இடைத்தரகர்களாக இயங்கும் கமிஷன் ஏஜெண்டுகளிடமும் சிக்கி தவிப்புடன் பாடாய் படுகின்றது. ஆகவே தக்காளி போன்ற பொருட்கள் ஒரு சில காலங்களில் இரண்டு ரூபாய்க்கு கூட பறித்து கொடுக்கும் அளவிற்கும், சாலையிலிருந்தும் தோட்டங்களில் இருந்தும் அழிக்கின்ற அளவுக்கு விலை சரிந்து இருந்திருக்கிறது.
பல நேரங்களில் அதே தக்காளி 120 முதல் 160 ரூபாய் வரை, ஆப்பிள் பழத்தை விட அதிகமான விலையில்விற்கப்படுகிறது. தக்காளி பெரும்பாலும் சீரான விலையில் ஆண்டு முழுதும்கிடைப்பதில்லை
உறங்கும் குளிர்பதன கிடங்குகள்:-
எத்தனையோ விவசாய கல்லூரிகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்கள், அரசு தனியார் நிறுவனங்கள் இருந்த போதும் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்குளிர்பதன கிடங்குகள் மூலமாக இதை பக்குவப்படுத்தி , நார்ச்சத்து போன்றவற்றை பதப்படுத்திநியாயமான விலையில் கிடைப்பதற்கு எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய தமிழ்நாட்டிற்குஒரு பெரிய சவாலாக இருக்கிறது.
ஆங்காங்கே சுய உதவி குழுக்களும்தமிழகத்தில் மிக சிறப்பாக செயல்பாடு இருப்பதால் அவர்களையும் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பெரும் திட்டமாக அமைத்துக் கொடுத்து வருடம் முழுவதும்தக்காளியை பயன்படுத்தும் சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்.
சுய உதவி குழுக்களுடன் விவசாயிகள்:-
இதற்கு பெரிய மூலதனம் அவசியமில்லை, காரணம் எந்தவொரு அரசாங்கமும் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளிக்கு Rs.2000, 3000 என்றும் பொங்கலுக்கு 4000 என்றும் வசதி பெற்றவர்களும் வசதி இல்லாதவர்களும் பெறுகின்ற சூழ்நிலையில் நமது திட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கக்கூடிய மக்களுக்கு மட்டும் இது போன்று சிறு உதவிகளை செய்துவிட்டு அதற்கு மேலாக நடுத்தர மக்களுக்கு இதுபோன்ற உதவிகளைசென்று விடாமல் செய்து அதனால் ஏற்படும் சேமிப்பை இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைத்து, 2500 கோடியை மிச்சப்படுத்தி கிட்டத்தட்ட 500 கோடியை ஒதுக்கீடு செய்தாலே கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களில் காய்கறி குளிர்பதன கிடங்குகளின் எண்ணிக்கையை உயர்த்தலாம்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட குளிர்பதன கிடங்குகளை சீர்படுத்தி முழு பயன்பாட்டிற்கு மாற்றி அமைக்கவும் இதுபோன்ற செயல்களில் சுய உதவி குழுக்களை பயிற்சி கொடுத்து ஊக்குவித்தால் விவசாயிகளுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நுகர்வோருக்கும் இது பேருதவியாக இருக்கும் என்பதை நம்பிக்கையோடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கடிதத்தில் கூறியுள்ளனர்.