இதுவரை 102 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 102 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 70, 71, 72, 73, 82, 84, 45, 48, 49 மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 35, 36, 34, 33, 32 ஆகிய வார்டு பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகள் தொடர்பான குறைகள் குறித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடும் வகையில் சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி இன்று (16.11.2021) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., வரவேற்புரையாற்றினர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.70 மற்றும் 71 வெரிவாடா மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, புலியகுளம், வாடு எண்.72 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அனுப்பர்பாளையம், வார்டு எண். 73 ஹைவேஸ் காலனி, வார்டு எண். 82 நல்லாயன் துவக்கப்பள்ளி வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு, வார்டு எண். 84 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கெம்பட்டி காலனி, வார்டு எண்.45 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சங்கனூர், வார்டு எண். 49 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ரத்தினபுரி, வார்டு எண்.35 கதிரவன் மஹால், ஆர்.ஜி.புதூர், வார்டு எண்.36 சுகுணா திருமண மண்டபம் காளப்பட்டி, வார்டு எண்.34 மாநகராட்சி ஆரம்பப்பள்ளி கருப்பராயம்பாளையம், வார்டு எண்.33 அரசு மேல்நிலைப்பள்ளி காளப்பட்டி, வார்டு எண்.32 மாகாளியம்மன் கோவில் மைதானம் விளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும், நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும், மொத்தம் 150 இடங்களில் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெறும் மாபெரும் மக்கள் சபை நிகழ்ச்சியானது கடந்த 30 தேதி முதல் துவங்கப்பட்டு, இதுவரை கோவை மாவட்டத்தில் 102 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் பொதுமக்களை நேரில் சந்தித்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மிக விரைவில் மீதமுள்ள மனுக்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். முதலமைச்சர் அவர்களின் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ள பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு உறுதியளிக்கிறேன், இங்கு வருகை தந்துள்ள மாவட்டத்தின் அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகளும் உங்களது கோரிக்கை மனுக்கள் மீது உரிய வகையில் மிக விரைவாக ஆராய்ந்து, நடவடிக்கை எடுத்து அரசின் உத்தரவுகளை பெற்றுத்தருவார்கள் என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் இதுவரை நடைபெறாத ஒரு சரித்திர சாதனையாக முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒரு வார்டுக்கு ஒரு இடமென தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து மனுக்களைப் பெற்று அதற்கு உரிய தீர்வுகளைக் காணவேண்டுமென உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்.
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது 9 நாட்கள், 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு, மாநகராட்சி பகுதிகள் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம் செய்யும் அளவிற்கு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்புத் திட்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள் பெற்று மேம்படுத்தக் கூடிய பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
அதேபோல, பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும் கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான சிறப்பு நிதிகளை பெற்று பழுதடைந்த சாலைகள் விரைவில் புதுப்பிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
அதேபோல, கோவை மாவட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கிட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. அவற்றை துறை ரீதியாக ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.
மேலும், தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் 505 வாக்குறுதிகளைத் தந்தார்கள். அதில் ஆட்சிப்பொறுப்பேற்ற 5 மாத காலத்தில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றித் தந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக, தாய்மார்களுக்கு 2.9 கோடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண உதவித்தொகை மற்றும் கோவிட் காலத்தில் 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கியுள்ளார். பெட்ரோல் விலை மற்றும் ஆவின் பால் விற்பனை விலைகளை குறைத்துள்ளார். மேலும், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் உட்பட 234 தொகுதிகளிலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் வழங்க இருக்கின்றார்கள்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவை சத்தி சாலை மேம்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொங்களுர் பழனிசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் பையா கிருஷ்ணன், முன்னாள் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், மண்டல உதவி ஆணையர்கள் ஆர்.சுந்தர்ராஜன், செந்தில்குமார் இரத்தினம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.