தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வடக்கு மண்டல துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மாணவியின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 வயது மகள். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி 17 வயது மாணவி, அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட 17 வயது மாணவி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது, அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் மேலும் இருவரின் பெயரை அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நேற்று மாலை இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு கோவை வடக்கு மண்டல துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தாரணி வீட்டிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மாணவிக்கு யார் யாரெல்லாம் மன உளைச்சல் கொடுத்து இருக்கிறார்களோ அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.
இதனடிப்படையில் பள்ளியின் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருக்கிறார். அதனால் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு முதல்வரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மேலும் இரண்டு நபர்கள் பெயர்களை அந்த மாணவியை கடிதத்தில் கூறியிருக்கிறார். அந்த நபர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை முறைப்படி எடுத்து வருகிறது. கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் என்றார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மாணவியின் உடலை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர்.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறியதாவது:-
எங்களது மகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும் அவர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து, மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவிக்கு அநீதி இழைத்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கருப்பு சட்டை அணிந்து மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை முன்பு பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலைக்கு நீதி வேண்டும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துக்கொண்டு மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இதேபோல் கோட்டைமேடு பெருமாள் கோவில் பகுதியில் மாணவியின் வீட்டின் முன்பு 200_க்கும் மேற்பட்ட அதிகமான கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.