கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 என அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.
கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால், கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள 7 மாவட்ட மக்கள், குறிப்பாக தொழில் ரீதியாக விமான பயணம் மேற்கொள்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
கோவை விமான நிலையத்தில், கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன், தினமும் 33 முதல் 35 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், நோய்தொற்று பரவலுக்கு பின், மே மாதம் முதல் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
ஜூன் மாதத்திற்கு பிறகு, அரசு அறிவித்த தளர்வுகள், அதிக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதுஉள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோவையில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. அதன்படி, இந்த மாதம் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 23 வரை தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசிய கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர், செந்தில் வளவன், " கோவை சர்வதேச விமான நிலையத்தில்கொரோனா நோய் தொற்று தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சீரான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தற்சமயம், தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 என அதிகரித்துள்ளது. கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவைவழங்கப்படுகிறது.
இது தவிர கோவையிலிருந்து பெங்களூர் வழியாக அகமதாபாத், மற்றும் சென்னை வழியாக பரோடா, கவுஹாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
