வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில், பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.