நில ஆர்ஜித பணிகளுக்கு, கடந்த மாதம் தமிழக முதல்வர் 1,132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு அரசாணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, இன்று அந்த தொகையை தமிழக அரசு விடுவித்துள்ளது.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உட்பட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் விமான இயக்கம் வழங்கபடுகிறது.
கோவை விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010ல் திமுக ஆட்சிக்காலத்தில், கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, தற்போதுள்ள விமான ஓடுதளத்தை 12 ஆயிரம் அடியாக அதிகரிப்பது மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய விமான நிலைய ஆணையகம் தயார் நிலையில் உள்ளபோதிலும், கடந்த பத்தாண்டுகளாக நிலம் ஆர்ஜித பணிகள் நிறைவடையாத காரணத்தினால், விரிவாக்க திட்டம் முடங்கியது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற உடன் தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த நில ஆர்ஜித பணிகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும், என தொழில் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 1,132 கோடி ரூபாய், விரிவாக்க பணிக்காக ஒதுக்கீடு செய்வதற்கு அரசாணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, இன்று அந்த தொகையை தமிழக அரசு விடுவித்துள்ளது.
நில ஆர்ஜித பணிகளை துரிதமாக மேற்கொள்ள இந்த தொகை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தமிழக அரசின் இந்த நடவடிக்கை தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து நம்மிடம் கருத்து தெரிவித்த கொங்கு குளோபல் போரம் (KGF) இயக்குனர் டி. நந்தகுமார் கூறுகையில், "தொழில் நகரான கோவை, தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் மிகச்சிறப்பாக திகழ்கின்றது. இருந்தபோதிலும், கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை அதிகம் இல்லாதது, தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதை நீளம் அதிகரிக்கப்படாத காரணத்தால் பெரிய விமானங்கள் கோவையில் இயக்க முடிவதில்லை. குறிப்பாக, சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப விமானநிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இத்தனை நாட்கள் நில ஆர்ஜித பணிகள் நிறைவடையாத காரணத்தால், விமான நிலைய விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த மாதம் கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்கள் தொழில்துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாணை பிறப்பித்துள்ளதை காண்பித்து பேசினார்.
இது தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில், இன்று அரசாணையில் தெரிவித்த 1,132 கோடி ரூபாயை, தமிழக அரசு விடுவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை ஒரே நாளில் கோவை வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையை தொழில் வளர்ச்சி குறித்து பெரிய நம்பிக்கையை தொழில்துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.