கல் இல்லாமல் இட்லி, தோசை மாவு அரைக்க உதவும் இன்ஸ்டன்ட் கிரைண்டர்களுக்கு அதிகரிக்கும் மவுசால், இளம் தலைமுறையினர் பராம்பரிய ருசியை அறியாமலே போய்விடும் என தொழில்துறையினர் வேதனைத் தெரிவித்தனர்.
கோவை: தமிழகர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு தேசிய அளவில் மட்டுமில்லை சர்வதேச அளவில் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. மாவு அரைப்பதற்கு தயாரிக்கப்படும் கிரைண்டர்கள் இந்தியாவிலே கோவை மாவட்டத்தில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மற்றும் 3,000 உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் மட்டும் செயல்படுகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர். இதன் மூலம்வீட்டுத்தேவை மற்றும் வணிகப்பயன்பாடு என பல்வற்றிற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. இதன் விலை 4 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை பல்வேறு மாடல்களில் கிரைண்டர்கள் கோவையில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையில் சமீபகாலமாக இன்ஸ்டன்ட் கிரைண்டர்களின் தேவை அதிகரித்துள்ளதால் இதன் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தொழில்துறையினர் கூறுகின்றர்.
இந்நிலையில் தான், இன்ஸ்டன்ஸ் கிரைண்டர்களின் பயன்பாடு அதிகரிப்பு குறித்து பேசிய கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம்(COWMA CLUSTER) தலைவர், சாஸ்தா எம் ராஜா, இட்லி மற்றும் தோசை மாவு அரைப்பது பெரிய விஷயமாக துவக்கத்தில் இருந்தது. ஆனால் நாளடைவில் 'டேபிள் டாப்', 'டில்டிங்' என்பது உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் 'கல்' கொண்டு தயாரிக்கப்படும் கிரைண்டர்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. இருப்பினும் கிரைண்டர்களில் உள்ள கல் சுத்தம் செய்ய சிரமம் உள்ளிட்ட காரணங்களால் இன்று பலர் ரெடிமேட் இட்லி, தோசை மாவு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரே நேரத்தில் அதிக மாவு அரைக்க உதவும் கிரைண்டர்கள் தேவை அதிகரித்துள்ளது. இத்தகையத் தேவையை தீர்க்க 'இன்ஸ்டன்ட் கிரைண்டர்கள்' உதவுகின்றன. இதுபோன்ற கிரைண்டர்களில் 'கல் இல்லாமல்' அரிசி, உளுந்து, தண்ணீர் உள்ளிட்டவற்றை இயந்திரத்தில் ஒரே சமயத்தில் போட்டு மெஷினை இயக்கினால் மாவு உடனடியாகக் கிடைக்கும். இத்தகையக் கிரைண்டர் பத்தாயிரம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அதிகளவில் தற்போது மாவு பாக்கெட்டுகளை வாங்கித்தான் மக்கள் வீடுகளில் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர்.
ஆனால் 'கல்' கொண்டு தயாரிக்கப்படும் கிரைண்டர்களில் அரிசி தனியாக உளுந்து தனியாக அரைத்து அவை புளித்த பின் இட்லி, தோசை, ஆப்பம் உள்ளிட்ட உணவு வகைகள் சமைத்து சாப்பிடும்போது கிடைக்கும் சுவை இந்த இன்ஸ்டன்ட் கிரைண்டர்களில் கிடைக்காது எனவும் ரெடிமேட் இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் தான் இதுபோன்ற கிரைண்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என வேதனைத் தெரிவித்துள்ளார். மேலும் முன்பெல்லாம் வட மாநிலங்களில்தான் இன்ஸ்டன்ட் கிரைண்டர் அதிகம் விற்பனை செய்யப்படும். காரணம் அங்கு உள்ள மக்களுக்கு 'கல்' கண்டு அரைக்கும் கிரைண்டர் மூலம் தயாரிக்கப்படும் இட்லி, தோசை தோசையின் ருசி குறித்து தெரியாது.
ஆனால் தற்பொழுது தமிழகத்திலும் இன்றைய இளைய தலைமுறையினர் ரெடிமேட் இட்லி தோசை மாவு வாங்கி உண்ணும் பொழுது கல் கொண்டு மாவு அரைக்கும் கிரைண்டர் மூலம் கிடைக்கும் ருசி தெரியாமலேயே பழகிப்போகத் துவங்கியுள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.