வீடு இல்லாத திருநங்கைகள் தங்குவதற்கு, மூன்று விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கல்வி தகுதிக்கேற்ப, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
கோவை: கோவையில் திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக, கோவை மாவட்ட போலீசார் மூன்று திட்டங்களை வகுத்துள்ளதாக மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், சிக்னல்களில் நின்று பணம் கேட்கும் திருநங்கைகளில் சிலர், தராதவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, ஆபாசமாக நடப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதை தடுக்கும் பொருட்டும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும் பொருட்டும், கோவை மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து எஸ்.பி., செல்வ நாகரத்தினம் கூறியதாவது:-
திருநங்கைகள் மறுவாழ்வுக்காக, 'சிகரம் தொடு' எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வீடில்லாத திருநங்கைகள் தங்குவதற்கு, மூன்று விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருநங்கைகளில் பலர், கல்வியறிவுடன் உள்ளனர். கல்வி தகுதிக்கேற்ப, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதற்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளது. அவர்களுக்கு தெரிந்த தொழிலில் பயிற்சி அளித்து, அவற்றில் ஈடுபடுத்த உள்ளோம்.
இவை தவிர, ஹவுஸ் கீப்பிங், சமையல் கலை, ஓட்டல்களில் சர்வர் ஆகியவற்றிலும் அவர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். பல்வேறு திறமைகளை கொண்டுள்ள, 40 திருநங்கைகள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.