பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம் என மத்திய, மாநில அரசுகள் கண்ணாமூச்சி ஆடுகின்றன என கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
கோவை: கோவையில் மாநில உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனைக்கூட்டம் ப்ரூக் பீல்ட் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கோயம்புத்தூர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் குருசாமி, மற்றும் மேற்கு மாவட்டங்களைச்சேர்ந்த லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக ஏற்று கூலி, இறக்கு கூலி, தபால் மாமூல் போன்றவைகளை சரக்கு உரிமையாளர்களே கொடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் டீசல் மீதான விலையைக்குறைக்க தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகளின் படி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 4 குறைத்துக்கொடுக்க வேண்டும் என கூறினார்.
இதோடு வாகனங்களின் பின்னால் ஒட்டப்படும் ஒளிரும் பட்டைகளை மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட 11 நிறுவனங்களில் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டப் போதும், தமிழகத்தில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துவது லஞ்சத்திற்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டினார். எனவே இப்பிரச்சனையில் தலையிட்டு மாநில போக்குவரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் போலீசார் வாகன ஓட்டுனர்கள் இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, அவ்வப்போது அரசிடம் பேசி வருகிறோம் எனவும் போலீசார் ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். முறைப்படி தமிழ்நாட்டில் 16 சுங்க சாவடிகள் தான் இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்க சாவடிகள் உள்ளது. இப்பிரச்சனைக்குறித்து நீதிமன்றத்துக்குச் சென்றாலும் காலதாமாகின்ற சூழலில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள 32 சுங்கசாவடிகளை நீக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.