உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியை இயக்கி வந்த ஓட்டுநரை கைது செய்த போலீசார், அந்த வாகனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை தடாகம் சாலை பகுதியில் சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரியினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் சாலை, அடுத்த கணுவாய் பகுதியில், தடாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜான் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் வந்த (TN38AL9852) லாரியினை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது சட்டவிரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, லாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல்துறையினர் லாரியை ஓட்டி வந்த கார்த்திகேயன் (40), என்பவரை கைது செய்தனர்.
மேலும், தற்பொழுது செங்கல் சூளைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட லாரியினையும், அதனை இயக்கிய ஓட்டுநரையும், கைது செய்த காவல்துறையினர் அந்த வாகனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர். மேலும், லாரி ஓட்டுநரை தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.