தென்னை நார் தொழிலில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி 50% அதாவது 2,000 கோடி ரூபாய் பங்களிப்பு. அதேபோல், உள்நாட்டு மொத்த வணிகத்தில் பொள்ளாச்சி 5 ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.
தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதியில் பொள்ளாச்சியின் பங்களிப்பு 2 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு வணிகத்திலும் ஐந்தாயிரம் கோடியாகவும் அதிகரிப்பு: ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (தென்னை நார் தொழில்) ஆலோசகர், கவுதமன் தகவல்.
தென்னை நார் கொண்டு தயாரிக்கப்படும் கயிறு தொழிலில் இந்தியா முழுவதும் 22,000 தொழில்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு, மத்திய அரசு தொடர்ந்து அளித்துவரும் முக்கியத்துவம் காரணமாக இத்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருவதாக, தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தேசிய கயிறு வாரியம்
தென்னை நார் தொழில் மேம்பாட்டுக்காக தேசிய கயிறு வாரியம் செயல்பட்டு வருகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய இந்த வாரியம், கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும், பொள்ளாச்சி உள்பட 4 இடங்களில் மண்டல அலுவலகங்களும் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட நான்கு இடங்களில் துணை மண்டல அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர கயிறு வாரியத்துக்கு இரண்டு இடங்களில் ஆராய்ச்சி மையங்கள் பெங்களூரிலும் மற்றொன்று, கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ளன. இதன், பிரத்தியேக பயிற்சி மையங்கள் தஞ்சாவூர், புவனேஸ்வர், சித்ரதுர்கா, ராஜமுந்திரி, அகர்தலா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் கயிறு வாரியத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் தென்னைநார் துறையின் வளர்ச்சி குறித்துப் பேசிய தென்னைநார் தொழில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (United Nation Development Program) ஆலோசகர் மற்றும் மத்திய அரசு, கயிறு வாரியத்தின் உறுப்பினர், எஸ்.கே. கவுதமன் கூறியதாவது:
தென்னைநார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காயர் ஜியோ ஓவன் டெக்ஸ்டைல்ஸ், காயர்வுட், தலை விரிப்புகள், தென்னை நார் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், கோ கோ பித் கொண்டு விவசாயம் செய்வது உள்ளிட்டவை இத்துறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகும்.

இத்துறையில், கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன் 2,500 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வணிகம் நடைபெற்று வந்தது. உள்நாட்டில், 8,000 கோடி மதிப்பிலான தென்னை நார் சார்ந்த பொருட்கள் வணிகம் நடைபெற்று வந்தது. ஆனால், நோய் தொற்று பரவலுக்குப் பின் இந்திய அரசு தொடர்ந்து அளித்து வரும் முக்கியத்துவம் மற்றும் உதவிகள் காரணமாக ஏற்றுமதியானது 4,000 கோடி ரூபாயாகவும், உள்நாட்டு வணிகம் ரூபாய். 14 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னை நார் தொழிலில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி 50% அதாவது 2,000 கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது. அதேபோல், உள்நாட்டு மொத்த வணிகத்தில் பொள்ளாச்சி 5 ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலுக்குப் பின் இத்தொழில் சராசரியாக 30 முதல் 50 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தென்னை நார் மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் காலங்களில் உள்நாடு மட்டுமின்றி உலக அளவிலும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மிகச் சிறந்து விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.