கோவையில் இந்திய விமானப்படைப் பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதுக் குறித்த விவகாரத்தில் கைதான அதிகாரி ஒரு நாள் விசாரணைக்குப்பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து மீண்டும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை பந்தய சாலைப் பகுதியில் உள்ள விமானப்படைப் பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதியன்று தன்னை சக ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விமானப்படைப் பயிற்சி கல்லூரியைச்சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் 376 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் தான் விமானப் படை அதிகாரி மீதான எந்தவொரு வழக்கையும் காவல்துறையினர் விசாரிக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் இதுக்குறித்து விசாரிக்கவும், பதில் மனுத்தாக்கல் செய்ய போதிய அவகாசம் தேவை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பாலியல் வழக்கில் கைதாகியுள்ள விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷ் உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது ரிமாண்ட் காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். முன்னதாக பாதிக்கப்பட்டப் பெண் அதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மாநில காவல்துறையே இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விமானப்படை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை காவல்துறை எடுத்து விசாரிக்க அனுமதி கோரியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்கள் குறித்து நீதிபதி திலகேஸ்வரி முன்னிலையில் மூன்று மணி நேர விசாரணை நடைபெற்றது. இறுதியில் பாலியல் வழக்கில் கைதான விமானப்படை அதிகாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.