பல்லடம் முதல் கொச்சி வரையிலான சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா.வேலு தகவல்.
கோவை: தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா.வேலு தெரிவித்தார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கோவை மற்றும் கொங்கு குலோபல் அமைப்பு சார்பில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொழில்துறை ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா.வேலு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தொழில் துறை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, சாலை விரிவாக்கம், நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
பின்னர் சிறப்புரையாற்றிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா.வேலு பேசுகையில்,
தனிமனித பொருளாதாரம், கிராமப்புற மற்றும் நகர வளர்ச்சிக்கு சாலைகள் முக்கிய பங்காற்றுபவை எனவும், கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதிக்கு ரயில் போக்குவரத்து, விமான சேவை மற்றும் சாலை கட்டமைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிப்பவை என தெரிவித்தார்.
மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.1132 கோடி மதிப்பில் நிலங்கள் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிக்கான நடவடிக்கைகளை விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், தொழில்துறை வளர்ச்சி அடைந்தால் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகமாகும் எனவும், தமிழகத்தின் மேற்கு பகுதிக்கான வளர்ச்சிக்கு தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பல்லடம் முதல் கொச்சி வரையிலான சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லடம் - சித்தூர் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை முதல் கரூர் வரை நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் 2024ம் ஆண்டுக்கு முன்பு இப்பணி நிறைவு பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தின் மூலமாக தொழில்துறையினர் அளித்துள்ள கோரிக்கைகள் முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இவை மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் முக்கிய பகுதிகளில் இறங்கு தளம் அமைப்பதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் முக்கிய பகுதிகளில் இறங்கு தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.