சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன் என்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
கோவை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு இன்று சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழியை அரசு ஊழியர் வாசிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராமலிங்கம் கீழ்க்கண்ட உறுதி மொழியை வாசித்தார்.

சமூகநீதி நாள் உறுதிமொழி!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!
இந்த உறுதி மொழியை வாசிக்க அதனை வருவாய் துறை ஊழியர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதி மொழி ஏற்றனர். இதேபோல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.