கோவை மாவட்டம் வால்பாறையில் பிச்சைக்காரரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில், அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: வால்பாறையில் அண்ணா நகர் பகுதியைச்சேர்ந்த வரதராஜன் என்பவர் அங்குள்ள சுப்பிரமணியன் கோவில் வாசலில் பிச்சை எடுத்துவருகிறார்.
இவருடைய 42 வயதான மகன் பாக்கியராஜ் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக வீட்டை விட்டு சென்ற நிலையில் திருவண்ணாமலைக் கோவிலில் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னதாக மீண்டும் வால்பாறைக்கு வந்த பாக்கியராஜ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் வால்பாறையில் சட்ட விரோதமாக கஞ்சாவை வாங்கியதோடு மட்டுமில்லாமல் பல இடங்களுக்கு சென்று அதனையும் விற்பனையும் செய்துவந்திருக்கிறார்.
இதேப்போன்று காமராஜ் நகர் பகுதியில் சாலையோரம் சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் திரிந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பாக்கியராஜிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து விசாரணை நடத்தியதில் எந்தவித பதிலும் சரியாகத்தெரிவிக்காத நிலையில் பிச்சைக்காரர் பாக்கியராஜை வால்பாறை போலீசார் கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து இவ்வளவு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? இதுவரை யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது? இந்த கஞ்சா விற்பனையில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் என போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.