செட்டிங், மோசடி மற்றும் ஊழல் டெண்டர்களில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்களை கருப்பு பட்டியலில் உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தல்.
கோவை: கோவை மாநகராட்சி டெண்டர் வழிமுறைகளில் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கை வேண்டி ஆணையரிடம் அறப்போர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த ஊழல்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்துள்ளது.
தற்பொழுது கோவை மாநகராட்சியை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையரை நேற்றைய தினம் சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம். இவற்றை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
1. கோவை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக செட்டிங், மோசடி மற்றும் ஊழல் டெண்டர்களில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான செந்தில் & கோ, கே.சி.பி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், வரதன் இன்ஃப்ரா, கான்ஸ்டிரானிக்ஸ் இந்தியா, ராஜன் ரத்தினசாமி, ராபர்ட் ராஜா etc போன்றவர்களை கருப்பு பட்டியலில் உடனடியாக சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஊழல் டெண்டர்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய வேண்டும். அவர்களை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
2. ஒரே டெண்டரில் போட்டிபோடும் இருவர் நிறுவனத்தின் இயக்குனர் ஒரே நபராக இருந்தாலோ அல்லது நேரடி சொந்தக்காரர்களாக இருந்தாலோ, அவர்கள் டெண்டரில் போட்டி போட தடை விதிக்கும் நிபந்தனைகள் ஒவ்வொரு டெண்டர் ஆவணத்திலும் இடம் பெற வேண்டும்.
3. கோவை மாகராட்சி டெண்டர்களை முழுக்க முழுக்க e – டெண்டர்களாக மாற்ற வேண்டும். டெண்டர் வைப்பு தொகை செலுத்துதல் இணையதளத்தின் வழியாகவே செய்யப்பட வேண்டும். எந்த காரணத்திற்கும் டெண்டர் முடியும் வரை ஒப்பந்ததாரர் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து வேண்டிய அவசியம் இருக்க கூடாது. அனைத்து ஆவணங்களையும் இணையவழியாக மட்டும் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
4. டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும். டெண்டரில் போட்டி போட்டவர்கள் யார், எவ்வளவு விலைக்கு எந்த டெண்டரை எடுத்துள்ளார்கள், டெண்டர்களில் செய்ய வேண்டிய வேலைகள் எவை போன்ற விவரங்கள் www.tntenders.gov.in இணையதளத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோவை மாநகராட்சி அதிகாரிகளால் மறைக்கப்பட்டு வருகிறது. அதை உடனே சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து டெண்டர் வேலை விவரங்களும் மக்கள் எளிதாக பார்க்கும் வண்ணம் இணையதளத்தில் இருக்க வேண்டும்.
5. மிகச்சிறிய தொகை தவிர அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக ஈ-டெண்டர்களாக விடப்பட வேண்டும். அதே போல், அரசாங்க அனுமதி பெறாமல் டெண்டர்களை பிரித்து விடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்தையும் பேக்கேஜ் செய்யும் முறை கைவிடப்பட வேண்டும்.
6. சாலை போடும் பொழுது சாலை உயராமல் அதற்கேற்ப சாலையை தோண்டி எடுத்து (milling) அதே உயரத்திற்கு சாலை போடும் முறை கையாள வேண்டும்.
7. டெண்டர் வேலைகளின் தரத்தை சரிபார்க்க தன்னிச்சையான தர குழு மாநகராட்சியில் அமைக்க வேண்டும். இதில் அப்பழுக்கற்ற அதிகாரிகள் அமர்த்தப்பட வேண்டும்.
8. டெண்டர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை, சந்தை மதிப்பு போன்றவை சரிபார்த்து உண்மையான சந்தை மதிப்பிற்கு சரி செய்யப்பட வேண்டும்.
9. அனைத்து டெண்டர்களும் டெண்டர் புலடினில் இடம்பெற வேண்டும். அவை ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
10. கடந்த சில ஆண்டுகளாய் இணையத்தில் ஏற்றாத மன்ற தீர்மானங்கள் தற்பொழுது ஏற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. எந்த தாமதமும் இல்லாமல் அவை மாதா மாதம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
11. வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். 2010 ல் கொண்டு கோவை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சியில் சட்ட மாற்றங்கள் செய்த பிறகும் இன்று வரை இவை உருவாக்கப்படவில்லை.
12. சந்தை மதிப்பு மாதத்திற்கு சதுரடிக்கு ரூ. 105 உள்ள ஆர்.எஸ்.புரத்தில் வெறும் ரூ. 5 க்கு ஆலயம் டிரஸ்ட் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நல்லறம் டிரஸ்டுக்கு அம்மா ஐஏஎஸ் அகாடமி நடத்த கொடுக்கப்பட்ட கோவை மாநகராட்சி 5400 சதுரடி நிலம் மற்றும் கட்டிடம் திரும்பப் பெற்று கோவை சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு தரப்பட வேண்டும்.
13. கோவை மாநகராட்சி இணையதள புகார் வழிமுறை நம்ம சென்னை புகார் வழிமுறை போல மேம்படுத்தப்பட வேண்டும். புகார் பிரச்சனை தீர்க்காமல் மூடப்பட்டால் மக்கள் புகாரை மீண்டும் திறந்து அதை மேலதிகாரிக்குத் தெரிவிக்கும் வழிமுறையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.