கோவை மாவட்டத்தில் நாளை 1475 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி சங்கர் தெரிவித்துள்ளார்.
கோவை: நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பாதிப்பு மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது.
வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்பதால் மக்கள் பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வந்தனர். ஆனால் பல இடங்களில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடும் நிலவியது. இந்நிலையில் தான் இதுப்போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தமிழகம் முழுவதும் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை நாளை நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் குறித்தப் பணிகளை இன்று கோவை மாவட்ட கொரொனா கண்காணிப்பு அதிகாரி சங்கர் ஐ.ஏ.எஸ், மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டதோடு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 1475 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2950 அலுவலர்களும், ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடுவதற்கான மக்களை அழைத்து வருவதற்கு என 2950 அங்கன் வாடி ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கூறினார்.
இதோடு கோவை வ.உ.சி பூங்காவில் இரண்டாவது தவணை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தனித்தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வணிக நிறுவனங்கள் நாளை தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கொரோனா தடுப்பு அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடன் இருந்தனர்.