கோவை: வால்பாறை தெப்பகுள மேடு பகுதியில் குடிசை அமைக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தி வரும் அக்டோபர் 2ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கல்லார் ஆதிவாசி மக்கள் அறிவித்துள்ளனர்.
கோவை: வால்பாறை தெப்பகுள மேடு பகுதியில் குடிசை அமைக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தி வரும் அக்டோபர் 2ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கல்லார் ஆதிவாசி மக்கள் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கல்லார் ஆதிவாசி பழங்குடி மக்கள் செய்தியாளர் சந்திப்பு ஏற்படுத்தினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், நாங்கள் ஆனைமலைத் தொடரின் பூர்வ குடியான காடர் பழங்குடிகள் நாங்கள். கல்லார் எனும் கிராமத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து வந்தோம். மொத்தம் 23 குடும்பங்கள் உள்ள கிராம குடியில் 2018ம் ஆண்டு பெய்த கடும் மழையில் எங்களது கிராமத்தில் பெருமளவு வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்தோம். கிராமத்திற்குச் செல்லும் வழி நெடுகளிலும் பெருமளவு நிலச்சரிவும் ஏற்பட்டது.
இருப்பினும், சாலை போக்குவரத்து இல்லாத போதும், தகவல் தொடர்பற்ற ஆபத்தான நிலையிலும் நாங்கள் காவல்துறைக்கும், வனத்துறைக்கும் நேரில் தகவல் அளித்து விட்டு, எங்கள் உயிர்களை காப்பாற்ற ஊரை விட்டு சற்று மேலே தாய்முடி வரும் வழியில் சற்று பாதுகாப்பான இடத்தில் 7 குடிசைகளை அமைத்தோம். 4 தினங்கள் கழித்து வனத்துறையினர் அங்கிருந்து எங்களை வலுக்கட்டாயமாக அகற்றி பழுதடைந்த தாய்முடி தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் கட்டாயமாக தங்க வைத்துள்ளனர்.
எங்கள் பிரச்சனைக்கு தீர்வு தந்து 10 நாட்களில் மாற்று இடம் அளிப்பதாக கூறி, கடந்த 3 ஆண்டுகளாக மாற்று இடத்தை அளிக்கவில்லை. மாற்று இடமாகிய தெப்பகுளமேட்டில் நில அளவை செய்து ஓராண்டு ஆகிறது. இன்று, நாளை எங்களுக்கு இடம் கிடைத்து விடும் எனும் நம்பிக்கையில் நாங்கள் தினம் தினம் செத்துப் பிழைக்கிறோம். நாங்கள் அனுபவிக்கும் பெருந்துயரத்தையும், துயர் நீங்கிட நாங்கள் நடத்த உள்ள அறவழி போராட்டத்தையும் வால்பாறை ஊடக தோழமைகளான தங்கள் முன் அறிவிக்கிறோம்.

நாங்கள் மாண்போடு உயிர் வாழ்தலின் பொருட்டும், எங்களுக்கு தெப்பகுள மேடு பகுதியில் மாற்று இடம் உடனடியாக வழங்கிட வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வருகின்ற அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் நடத்தவுள்ளோம் என்றனர்.
எங்களது கல்லார் கிராமம் இடமலை ஆற்றின் மேலே அந்தரங்கத்தில் தொங்கும் நிலையில் மூன்று பக்கமும் பள்ளத்தாக்கும், நீர் நிலையும் கொண்டது. ஏற்கனவே எங்கள் ஊருக்கு கிழக்கு புறமும், தெற்கு புறமும் சுமார் 5 ஏக்கர் அளவு பரப்பளவை இதுபோன்ற நிலச்சரிவினால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டோம்.
ஊரின் நடுப்பகுதியிலும், வீட்டின் தளங்களிலும் நில வெடிப்புகளும், நிலச்சரிவும், சேதமும் ஏற்பட்டுள்ளது. ஊரில் ஒட்டுமொத்தமாகவே சுமார் 50 ஏக்கர் பரப்பளவு குடியிருக்கும் வீடும் ஊரை சுற்றி மண்பரப்பு உள்ள விவசாய நிலம் உள்ளது.
குறிப்பாக, மழைக்காலத்தில் எங்களது ஊரில் தங்கவே முடியாது. நீரின் இரைச்சல் சத்தமும், எந்நேரத்திலும் இடிந்து விழும் தன்மை உடையதாக உள்ள மண் அமைப்பு இருப்பதால் இரவில் குழந்தைகள் பெண்கள் யாரும் தூங்க முடியாது.
அதேபோல, ஊருக்குச் செல்வதற்கு பாதை இல்லை. இருசக்கர வாகனம், மருத்துவ ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வண்டியும் கிராமத்திற்குச் சென்று வர இயலாது. மருத்துவ வசதியும், பள்ளி கல்வி பெறும் வசதியும் இல்லை.
கடந்த 3 வருடங்களாக தற்காலிக குடியிருப்பில் அவதிப்பட்டு வருவதால் எங்களுடைய பாரம்பரிய வாழ்வும், சடங்கு, வழிபாட்டு முறைகள், கலாச்சாரம், சுதந்திரம் தடைப்பட்டு உள்ளது. மருத்துவ வசதி பெற முடியாமல் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட இராமராஜ் என்பவர் இரண்டு மாதத்திற்கு முன்னர் இறந்து போனார்.
திருமணங்கள் ஊரில் நடத்த முடியாமல் அருகே உள்ள கிராமத்தில் 2 திருமணங்களை நடத்தி உள்ளோம். ஒரு சில திருமணம் தடைபட்டு உள்ளது. தேயிலை தோட்ட தற்காலிக குடியிருப்பிலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 வீடுகளும் பராமரிப்பற்ற ஒழுகும் வீடாகவே வழங்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர், கழிப்பிடம், அடுப்பு எரிக்க விறகு சேகரிக்க முடியாமலும் பரிதவிக்கிறோம். மிகுந்த மனவேதனையில் வாடுகிறோம்.
எங்களது உரிமைகளுக்காக அறவழியில் போராடக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் -15 ம் தேதியன்று தெப்பகுள மேடு பகுதியில் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்ததும், மாற்று இடம் கோரும் தெப்பகுள மேட்டில் தெய்வ வழிபாடு மற்றும் அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தோம். அதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு இன்றுவரை வனத்துறையின் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஆளாயினோம்.
இப்போராட்டத்தின் விளைவாக தெப்பகுள மேடு பகுதியில் வருவாய்த்துறை, வனத்துறை, நில அளவை துறைகள் இணைந்து புதிய கிராமத்திற்கு நில அளவை செய்யப்பட்டு தேசிய புலிகள் காப்பக அனுமதி வேண்டி அனுப்பி வைத்துள்ளதாக வனத்துறை தெரிவிக்கிறது.
இப்பிரச்சனையில் வருவாய்த்துறை, காவல்துறை, வால்பாறையில் உள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தாலும், வனத்துறை இதில் திட்டமிட்டு அரசையும், எங்களையும் திசை திருப்புகிறது. எங்கள் உயிர் வாழும் உரிமை மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழும் உரிமையை வேண்டுமென்றே தடுக்கிறது.
எனவே, நாங்கள் உயிர் வாழும் பொருட்டு எங்கள் தலைமுறைகள், சந்ததியினர் வாழ வேண்டி இந்த அறவழி போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் கல்லார் கிராம காடர் பழங்குடிகள் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர். ஊர் முப்பன் நாராயணன், சக்திவேல், கனகராஜ், இராஜலெட்சுமி, பழங்குடி இனத்தலைவர், தங்கசாமி, பழங்குடிகள் உரிமைக்கான செயல்பாட்டாளர் தனராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.