கோவை: தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(சீமா) 68-வது ஆண்டு கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.வி. கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை: தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(சீமா) 68-வது ஆண்டு கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.வி. கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்கூட்டம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. கூட்டத்தில், டெக்கான் இண்டஸ்ட்ரீஸ், நிர்வாக இயக்குனர், கே.வி.கார்த்திக் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எல்லன் பம்பு நிறுவனத்தின் விக்னேஷ், மகேந்திரா பம்ஸ் நிறுவனத்தின் மிதுன் ராமதாஸ், சூப்பர் டெக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கே.வி. கார்த்திக் பேசியதாவது:-
'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், அத்திட்டத்தில் கோவை மாவட்ட தயாரிப்பாக பம்ப்செட் தேர்வு செய்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சீமா' சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திட்டத்தின் கீழ், 150-மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு என தேர்வு செய்யப்பட்ட தயாரிப்பு சர்வதேச சந்தையில் வெற்றி பெறத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் அனைத்து வசதிகளை உருவாக்க அரசு வழிவகுக்கும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களுக்கும் சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் இந்திய பம்ப்செட் தேவையும் இத்திட்டத்தின்கீழ் கிடைக்கப்பெறும் அரசு உதவிகளும் 'கோவை உலகம் பம்ப்செட் தயாரிப்பு மையமாக உருவெடுக்கும்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரச்சான்றான சிபி(CB)மார்க்கிங்கிற்கான ஆய்வுக்கூடம் நிறுவப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தற்போது இந்தியாவில் இதற்கான ஆய்வுக்கூடம் இல்லை. இந்தியத் தயாரிப்பாளர்கள் சீனாவிற்கு அனுப்பித் தரச்சான்று பெற வேண்டியுள்ளது.
அத்துடன் சில தயாரிப்பாளர்கள் உள்ளடக்கிய ஏற்றுமதி கூட்டமைப்பு கிளஸ்டர் உருவாக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சீமாவின் கீழ் செயல்படப்போகும் இந்த கூட்டமைப்பு மூலம் சர்வதேசச் சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்துவரும் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உட்பட 'கொடிசியா', இந்தியத் தொழில் வர்த்தக சபை, கோ-இந்தியா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.