கோவை: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3-லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் தொழில் நிறுவனங்கள் சிறப்பாகப் பின்பற்றுவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3-லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் தொழில் நிறுவனங்கள் சிறப்பாகப் பின்பற்றுவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்களில் 6-லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாகத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டன.
இருப்பினும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைச் சிறந்த முறையில் தொழில் நிறுவனங்கள் பின்பற்றி வருவதாகவும், இதுவே நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்(Tiruppur Exporters Association) தலைவர். ராஜா.எம். சண்முகம் கூறியதாவது, "நோய்த்தொற்று தடுப்புக்கு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் சிறப்பான முறையில் பின்பற்றுவதை உறுதி செய்யத் தொழில் அமைப்புகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதன் காரணமாகவே தொழில் நிறுவனங்கள் அனைத்தும் செயல்படத் துவங்கிய போதும் நோய்த்தொற்று பரவல் அதிகம் ஏற்படாததற்குக் காரணமாகும். திருப்பூர் மாவட்டத்தில் 6-லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இதுவரை 3-லட்சம் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை அரசு சார்பில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த காரணத்தால் அதிக தொழிலாளர்களுக்கு ஆர்வம் இருந்தும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தது. தற்பொழுது தடுப்பூசிகள் வரத்து அதிகம் உள்ளதால் ஒதுக்கீடும் அதிகமாகக் கிடைக்கத் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாகத் தினந்தோறும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 2- டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதை உறுதி செய்ய அரசுடன் இணைந்து எங்கள் சங்கம் மட்டுமல்ல திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஏற்றுமதி சீசன் செப்டம்பர் 1-முதல் துவங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு நெருக்கடியிலிருந்து மீண்டு தொழில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லடத்தில் 75-ஆயிரம் தொழிலாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், முருகன் டெக்ஸ்டைல்ஸ், நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி, சக்திவேல் கூறியதாவது:-
பல்லடத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் 75,000-தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களில் அனைவருக்கும் அதாவது 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 25-ஆயிரம் தொழிலாளர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். விரைவில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 2-டேஸ் தடுப்பூசி செலுத்த அரசுடன் இணைந்து அனைத்து தொழில் நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
நோய்த் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மெல்ல அனைத்து தொழில் நிறுவனங்களும் மீண்டும் வரத் துவங்கியுள்ளது. நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 90, 828-பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 89,126-பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 933-பேர் நோய்த்தொற்று பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். தற்போது 769-பேர் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.