கோவை: 'ஏர் இந்தியா' சார்பில் முதல்முறையாக கோவையில் இருந்து 2 டன் கார்கோ 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' மூலம் அபுதாபிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கோவை: 'ஏர் இந்தியா' சார்பில் முதல்முறையாக கோவையில் இருந்து 2 டன் கார்கோ 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' மூலம் அபுதாபிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. ஏர்போர்ட் வளாகத்தில் அமைந்துள்ள ஏர் கார்கோ அலுவலகத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு வகையான கார்கோ புக்கிங் செய்யப்பட்டு விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோவையிலிருந்து உள்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை உள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில், இலங்கை, சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டுமே விமான சர்வீஸ் உள்ளது.
இதுபோன்று, வெளிநாடுகளுக்கு அதிக சர்வீஸ் இல்லாத விமான நிலையங்களில் 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, கோவையிலிருந்து பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு டிரக் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தற்போது இந்தியாவில் முதல்முறையாக 'ஏர் இந்தியா ' நிறுவனம் சார்பில் கோவை 'ஏர் கார்கோ' வளாகத்தில் பிரத்தியேக 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்'
அலுவலகம் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று செப்டம்பர் 2ம் தேதி முதல் முறையாக அபுதாபிக்கு 2,138 கிலோ கார்கோ அபுதாபிக்கு புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. சாலை வழியாக இந்த கார்கோ பெங்களூர் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அபுதாபி செல்லும் 'ஏர் இந்தியா' விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது.
விமான நிலையத்தில் உள்ள ஏர் கார்கோ வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கோவை சர்வதேச விமான நிலைய, ஏர் கார்கோ பிரிவின் உதவிப் பொது மேலாளர் சுப்பிரமணியன், 'ஏர் இந்தியா' மண்டல மார்க்கெட்டிங் மேலாளர் விஜயலட்சுமி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவையிலிருந்து பல்வேறு வகையான அதிக எடை கொண்ட கார்கோ 'ஏர் இந்தியா' சார்பில், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் கொண்டுசெல்ல இந்த புதிய 'பாண்டட் டிரக்கிங் சர்வீஸ்' வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. எனவே வணிகர்கள், தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என கார்கோ பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.