கோவை: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதில் கோவை தொழில் நிறுவனங்களின் நடவடிக்கை 95-சதவீதம் திருப்தி அளிப்பதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதில் கோவை தொழில் நிறுவனங்களின் நடவடிக்கை 95-சதவீதம் திருப்தி அளிப்பதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் திருப்தி அளிப்பதாக மாவட்ட தொழில் மையத்தின்(DIC) பொது மேலாளர், கார்த்திகை வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தொழில் நகரான கோவையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் தொழில் துறையினருக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முதல் அலை நோய்த்தொற்று பரவலின் போது சில நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதில் அலட்சியம் காணப்பட்டது.
ஆனால் இரண்டாவது அலை நோய்த்தொற்று பரவலுக்குப் பின் கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் என அனைத்து பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களிலும் நாங்கள் கள ஆய்வு நடத்தி வருகிறோம்.
அதன்படி தற்பொழுது நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் கோவையைச் சேர்ந்த அனைத்து பிரிவு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் 90 முதல் 95 சதவீதம் திருப்தி அளிப்பதாக அமைந்துள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. தொழில் நிறுவனங்களில் இயல்புநிலை திரும்ப உதவும் வகையில் தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த தொழில் துறையும் விமர்சிப்பது ஏற்புடையதல்ல: தொழில் முனைவோர் வேதனை
தொழில்துறையினர் சிலர் கூறியதாவது:
தொழில் நகரான கோவை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ், வெட் கிரைண்டர், காஸ்டிங், மோட்டார் பம்ப் செட், அனைத்து வகையான இன்ஜினியரிங் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றன.
கொரோனா நோய்த்தொற்று பரவல் அனைத்து தொழில் துறையினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. உற்பத்தித் துறையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளன.
இருந்தபோதும் தமிழக அரசின் நோய்த்தொற்று நிவாரண நிதிக்குக் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் பல கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளன.
சென்னைக்கு அடுத்து அதிக நிதி உதவி மட்டும் பொருள் உதவி வழங்கியுள்ளது கோவை மாவட்டம் தான். நிதிஉதவி மட்டுமின்றி கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி கருவி நிறுவுதல் படுக்கை வசதி என்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் தற்காலிக மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கோவை அரசு கலைக் கல்லூரி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கவும் தொழில் நிறுவனங்கள் உதவி செய்தன.
கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் நோய்த்தொற்று பரவல் அதிகம் காணப்பட்ட காலகட்டத்தில் தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் மட்டுமல்ல எந்த பேரிடர் அல்லது பேரழிவு ஏற்பட்டாலும் கோவை மாவட்டம் மட்டுமின்றி நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவிக்கரம் வழங்குவதில் கோவை மாவட்ட தொழில் துறையினர் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்பு கொண்ட போதிலும் நோய்த்தொற்று பரவல் அதிகம் காணப்பட்ட நேரங்களில் ஒரு சில நிறுவனங்கள் செய்த தவற்றுக்காக ஒட்டுமொத்த தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்தது தொழில் துறையினர் அனைவருக்கும் மிகுந்த வேதனை ஏற்படுத்தியது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைச் சரிவரப் பின்பற்றுவதில் அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களால் முடிந்த வரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் நாட்களிலும் அதிக அக்கறை கொண்டு செயல்படுவோம்.
இவ்வாறு தொழில்துறையினர் கூறினர்.