கோவை: கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இதுவரை 878 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 511 புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இதுவரை 878 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 511 புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்தால் வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமாக இந்த எண் மூலம் புகார்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுகாதாரம், வருவாய், போலீஸ், உள்ளாட்சி என 22 துறைகளின் கீழ் 878 புகார்கள் அளித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சுகாதாரத்துறைக்கு 142, வருவாய்த்துறைக்கு 136, ஊரக வளர்ச்சித்துறைக்கு 135, காவல் துறைக்கு 86, பேரூராட்சி துறைக்கு 70 புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 511 புகார்கள் நேரடி ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 367 புகார்கள் விசாரணையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது:
சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வரும் புகார் மனுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காலை 10 முதல் இரவு 7 மணி வரை அலுவலர்கள் புகார்களை பெறுகின்றனர். இதில் பெறப்படும் புகார்கள் மாவட்ட குறைகேட்பு போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று குறுஞ்செய்தி அனுப்பப்படும். பின் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
கோவையில் பொதுமக்களிடையே வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நல்ல வரவேற்புள்ளது. ஆனால், உடனடி தீர்வு காணும் அடிப்படை பிரச்சினைகளுக்காகவே இந்த குறைகேட்பு எண் அறிவிக்கப்பட்டது. இருந்தும் இலவச பட்டா, உதவித்தொகை போன்ற மனுக்களும் வருகின்றன. அதுபோன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த முடியாததால் அவை விசாரணையில் உள்ளன.
மேலும் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்பட மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளை வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிப்பதால் உடனடி தீர்வு கிடைப்பதுடன், மக்களின் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.