கோவை: தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்துறை பட்ஜெட்டிற்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்துறை பட்ஜெட்டிற்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TANSPA) பொருளாளர் சாஸ்தா எம் ராஜா கூறியதாவது:
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில், சூரிய ஒளி காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா ஆற்றல் உற்பத்தி துறை (Renewable Energy) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக சட்டசபையில் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஆயிரம் சோலார் மோட்டார் பம்ப்செட் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி துறையில் 10,000 மெகாவாட் எதிர்வரும் ஆண்டுகளில் அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
மரபுசாரா எரிசக்தி துறைக்கு தனி அமைச்சர் நியமித்து செயல்பட்டால் எதிர் வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த மின் தேவையையும் மரபுசாரா ஆற்றல் உற்பத்தி துறை பூர்த்திசெய்யும் அளவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு உள்ளன. தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில், 2021-22 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, எங்கள் அமைப்பு சார்பில் பல முக்கிய கோரிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நாங்கள் முன்வைக்கவில்லை. இருப்பினும், குறுந்தொழில்துறையினர் நீண்ட கால எதிர்பார்ப்பான குறுந்தொழிற் பேட்டைகளை கோவையில் அமைக்க நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிக்கும் பட்சத்தில் அனைத்து குறுந்தொழில் துறையினருக்கும் மிகுந்த பயனளிக்கும்.
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மின்சார மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதற்குப்பின், மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் மின்சார மானியத்தை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தொற்று பரவலுக்கு பின் குறுந்தொழில்துறையினர் தற்போது மிக கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். தமிழக அரசு சொத்துப் பிணையம் இன்றி கடனுதவி வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்
ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின்(RASA) தலைவர், சுருளிவேல் கூறியதாவது:
திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது, என்ற போதிலும் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் குறைவான நிதியே ஆகும். 15 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை எங்கள் சங்கம் வரவேற்கிறோம். கோவையில் பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து வரும் அடுக்குமாடி தொழிற்பேட்டை குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
500 கோடி மதிப்பீட்டில் கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. விரைவில் அதை செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.