தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த கோவை தொழில் துறையினருக்கு எதிர்பார்த்தபடி அறிவிப்புகள் வெளியாகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் புதிதாக வரிவிதிப்பு இல்லாததால் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின்(கொடிசியா) தலைவர், ரமேஷ் பாபு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில் புதிதாக வரிவிதிப்பு இல்லாதது மிகவும் வரவேற்கத்தக்கது.
இதற்காக தமிழக முதல்வர் மற்றும் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் 'டிபன்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க்' கோவையில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்தல், புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பசுமை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிப்பது, தரமான சாலைகள் அமைப்பதற்கு 17 ஆயிரத்து 899.17 கோடி ஒதுக்கீடு, வரும் பத்தாண்டுகளில் மின் உற்பத்தியை 17 ஆயிரத்து 980 மெகாவாட் அதிகரிப்பது.
பொதுத்துறை நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள TReDS என்ற எலக்ட்ரானிக் தொழில் நுட்பத்தின் மூலம் செயல்படுத்துதல், உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தவிர புதிதாக துறைமுகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைப்பது, ராணிப்பேட்டை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தொழில் பூங்காக்கள் அமைத்தல், பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்தல், சுகாதாரம் மற்றும் குடும்பநல துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் கடன் ஆவணங்கள் ஆன்லைன் முறையில் 'ப்ராசசிங்' செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்க தக்க வகையில் அமைந்துள்ளன.
மொத்தத்தில் திருத்திய நிதிநிலை அறிக்கையில் அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்( SIEMA) தலைவர், கே.வி. கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டும் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் தமிழக அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
வேளாண்துறைக்கு 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து 'ஜல்சக்தி' திட்டத்திற்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கோவையில் 'டிபன்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க், 500 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்தல், தமிழக தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தல், ஒற்றை சாளர முறை அமல்படுத்துவதால் தமிழகத்தில் புதிய முதலீடுகள் அமைய அதிக வாய்ப்புள்ளது. திருத்திய நிதிநிலை அறிக்கையை எங்கள் சங்கம் வரவேற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம்(காட்மா) தலைவர், சிவக்குமார் கூறியதாவது:

சமீபத்தில் தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் புதிதாக வரி விதிப்பு இல்லை.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தும் போது தொழில் துறையினருக்கு மிகவும் பயனளிக்கும். அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை எங்கள் சங்கம் வரவேற்கிறது.
கோவை மாவட்ட கம்ப்ரஸர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(COCIA ) தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:

கொரோனா நோய்தொற்று பாதிப்பால் குறு சிறு தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்த தொழில் துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பொருட்கள் உற்பத்திக்கு உதவும் வகையில் தொழில் பூங்காக்கள் அமைப்பது வரவேற்கத்தக்கது என்றபோதிலும் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துதல் மிக முக்கியம்.
அதற்கு உதவும் வகையில் தொழிற் சந்தைகளை தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை போல அமைக்க வேண்டும். அது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தனியார் சார்பில் அமைக்கப்படும் தொழில்பேட்டைகளுக்கு அரசு சார்பில் வழங்கும் ஒப்புதல்கள் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்(KOPMA) தலைவர், மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

'டிபன்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க், கோவையில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்தல், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தல், புதிய பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்படுத்துவது, தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை, புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைத்து குறு நிறுவனங்கள் கடன் பெற மாநில அளவில் கடன் உத்திரவாத திட்டம், தமிழக கூட்டுறவு வங்கிகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கை, தொழிற்பேட்டைகளில் 4.0 எனும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது வரவேற்கத்தக்கது.
இதேபோல் மோட்டார் பம்ப்செட், கிரைண்டர், பவுண்டரிக்கு உபயோகப்படுத்தும் மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்துதல், கோவையில் இலவச பம்ப்செட் பரிசோதனைக் கூடம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின்(ITF) கன்வீனர், பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கிறோம். பின்தங்கிய மாவட்டங்களில் சிப்காட் சார்பில் புதிதாக தொழில் பூங்காக்கள் அமைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
புதிய முதலீடுகள் அதிகரிப்பதுடன் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். டிஜிட்டல் முறையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை கிரெடிட் ரேட்டிங் செய்யும் திட்டம் நடைமுறைப் படுத்துவதால் தொழில் துறையினருக்கு அதிக பயன் கிடைக்கும்.
மாநில அளவிலான கிரெடிட் கேரண்டி இத்திட்டத்தால் கொரோனா நோய்தொற்று பாதிப்பில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிலிருந்து தொழில்துறையினர் மீண்டுவர வாய்ப்பு ஏற்படும்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் உற்பத்தி துறையில் 5 மெகா கிளஸ்டர் அமைப்பது மிகுந்த பயன்தரும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, 'சிட்கோ' தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்க (COSIEMA) தலைவர், நல்லதம்பி அறிக்கை:

சிறு குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக, குடியிருப்புகள் கட்டித் தரப்படும். தமிழகத்தில் 9 இடங்களில் 4,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் சிப்காட் தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைத்தல். கோவை மாநகரத்திற்கு இந்த நிதியாண்டிலேயே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
அதேபோல் கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி தொழில்பேட்டை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை கிளை) தலைவர் சி.பாலசுப்ரமணியம் அறிக்கை:

டிபன்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க்' கோவையில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்தல். நீண்ட நாள் கோரிக்கையான கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கம், வரி முறையை சீர்செய்ய திட்டம், பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு, 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) அஸ்வின் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஜவுளித் தொழிலுக்கு என்று பிரத்தியே துறை அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் வரும் காலங்களில் ஜவுளித்துறை சிறப்பான வளர்ச்சி பெறும். ஜவுளி பூங்காக்கள் அமைப்பது மற்றும் சிப்காட் வசதிகளை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புகள் ஜவுளித்துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
தொழில்நுட்ப ஜவுளி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர், கே.இ.ரகுநாதன் கூறியதாவது:

கட்டண ஏற்றம், விலை ஏற்றம் இல்லாத மற்றும் கட்டமைப்புக்கான செலவையும் குறைக்காமல் போடப்பட்ட பட்ஜெட்டுக்கு நன்றி.
நோய்வாய்ப்பட்ட MSME தேவைகளைப் பொறுத்தவரை, துரதிர்ஷ்டவசமாக ஒன்றிய தொகுப்புகளிலிருந்து கிடைக்க பெறாத, சுயதொழில் முனைவோரை மீட்க அறிவிப்புகள் போதுமானதாக இல்லை.
முன்னிலைப்படுத்த, நாங்கள் கோரியிருந்தோம் -
a) வட்டி இல்லாமல் 6 மாத EMIக்கு சமமான கடன், அதனால் EMI செலுத்த இயலாதவர்கள் அதைப் பெற முடியும்,
b) MSME யூனிட்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருட்களை வழங்க நியாய விலைக் கடைகளைத் திறத்தல்,
c) MSME இல் பயிற்சி பெற மற்றும் வேலைவாய்ப்பு திறன்களைப் பெற புதிதாக படித்த பட்டதாரிகளுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ரூ .6000 உதவித்தொகை வழங்குதல்,
d) சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு Container களை சொந்தமாக மற்றும் குத்தகைக்கு வழங்க, ஒரு Container கார்ப்பரேஷனைத் தொடங்குவது மற்றும் அவை கிடைக்காத நெருக்கடி மற்றும் அதிக சரக்கு செலவுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது
e) MSME SECTOR ஐ காப்பாற்ற ஒரு பிரத்யேக MSME அமைச்சரை நியமிப்பது, ஏனெனில் இப்போது MSME என்பது மிகவும் விரிவானது மற்றும் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிவாரணம் ஒன்றிய அரசாங்கம் கொடுத்ததை போலவே இருந்தாலும், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
இது ஒரு சில நீண்ட கால முன்னேற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின், பரவலாக்கப்பட்ட கவனத்திற்கு விதைத்திருந்தாலும், கடந்த 17 மாதங்கள் கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட MSME தொழில்முனைவோரை அவர்களின் வலியிலிருந்து மீட்பது முக்கியம்.
இந்த கோணத்தில் பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு நீண்ட கால பார்வை மற்றும் கவனம் செலுத்துவதற்கான ஒரு நேர்மையான முயற்சி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொங்கு குளோபல் கூட்டமைப்பின்(KGF), இயக்குனர் டி.நந்தகுமார் கூறியதாவது:

'டிபன்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க்' கோவையில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்தல். நீண்ட நாள் கோரிக்கையான கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
குறிப்பாக தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள திருத்திய நிதிநிலை அறிக்கையில் புதிதாக வரி விதிக்கப்படாதது தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.