கோவை: கோயில் சொத்தை ஆக்கிரமித்த கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி மீது வழக்கு இருப்பதாகவும் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திக்கப் போவதாகவும் திருத்தொண்டர் சபையின் நிறுவனர் பேட்டி அளித்துள்ளார்.
கோவை: கோயில் சொத்தை ஆக்கிரமித்த கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி மீது வழக்கு இருப்பதாகவும் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திக்கப் போவதாகவும் திருத்தொண்டர் சபையின் நிறுவனர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திருக்கோயிலின் சொத்துகள் சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் கோயில் நிலங்கள் குறித்து ஆய்வு செய்ய வந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோடு சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு செய்துவிட்டு, கோவையிலுள்ள சில கோயில்களின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ‘‘தமிழகக் கோயில்களின் சிலைகள், பொக்கிஷங்கள் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடி இருக்கிறது. தமிழகத்தில் அறநிலையத்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. கோயில்களின் அலுவலக ஆவணங்கள் பாதுக்காக்கப்படுவதில்லை, பதிவேற்றம் செய்வதில்லை. ஒரு வெளிநாட்டு அரசின் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது'' என குற்றம் சாட்டிய அவர் மேலும்,
‘‘தமிழகம் முழுவதும் திருக்கோயில்களின் ஆவணங்களில் 1974ஆம் ஆண்டு 1-15 என பதிவேடு பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தப் பதிவேடுகள், தற்போது இல்லை. சட்டப்பிரிவு 29-ன்படி பதிவான பதிவேடுகள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் குறித்த முதல்பதிவேடும், இனம் தூய பதிவேடு ஆவணங்களும் திட்டமிட்டு அறநிலையத்துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த பதிவேடுகள் குறித்து ஆய்வுக்குழுவை உருவாக்கி, குற்றம் புரிந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை'' எனவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, ‘‘அறநிலையத்துறையில் நேர்மையாக பணியாற்றும் ஊழியர்கள், நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. தமிழகத்தில் ஆலய சொத்துகள் 44,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போயிருக்கிறது என உயர் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் திருக்கோயில்களின் சொத்துகள் 4லட்சத்தி 78 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக அரசு ஆவணப்படுத்தியுள்ளது. மொத்தம் 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும் அதில் கட்டளை நிலங்கள், தான நிலங்கள் இன்னும் இணைக்கப்படவில்லை.
பொள்ளாச்சி ஜமீன் புரவிபாளையத்தில் பழனி சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் கீழ் இன்னும் மீட்கப்படவில்லை. திருக்கோயில் பதிவேடுகளுடன், ஆதார் இணைக்கப்பட வேண்டும். குத்தகைதாரரின் விவரங்கள், அனைத்தும் இணைக்கப்பட்டால் ஆண்டுக்கு திருக்கோயிலின் மூலமாக மட்டும் 13,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இதை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியும்.
திருக்கோயிலின் நகைகளும் இணையதளத்தில் பதிவிட வேண்டும். ரகசியமாக வைத்தால் கொள்ளையடிக்க வாய்ப்பாக இருக்கும் அனைத்து நகைகளும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழக அரசின் எந்த ஒரு துறையிலும் மக்கள்கொடுக்கும், மனுவிற்கு 30 நாட்களுக்குள் பதில் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அறநிலையத்துறையினர் கொடுக்காமல் திட்டமிட்டு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடுகின்றனர். திருக்கோயில் உபயதாரர்களை மாற்றான் தாய் போக்குடன் நடத்துகிறார்கள்.
சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வலியுறுத்தப்படும். 1994ஆம் ஆண்டுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சொத்து பதிவேடுகளை முறைப்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தார். இருந்தாலும், இதுவரை சாகுபடி நிலங்கள் பதிவேடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முறையாகப் பின்பற்றவில்லை.
தமிழகத்திலுள்ள கோயில்களில் உள்ள கடைகளை நடத்துபவர்கள் உண்மையான வாடகைதாரர் அல்ல. அறநிலையத்துறை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை குடும்ப சொத்துகளை வெளியிட அரசு முன் வர வேண்டும். அரசுத்துறையிலே அதிக ஊழலில் ஈடுபடுபவர்களில் அறநிலையத்துறையில் பணிபுரிபவர்கள்தான்.
அறநிலையத்துறை அதிகாரிகள் தமிழக அரசையும், அமைச்சரையும் ஏமாற்றி வருகிறார்கள். கோவையில் கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி அமைந்திருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானது. அதுகுறித்து வழக்கு உள்ளது. தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளேன்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் 4 லட்சத்தி 78 ஆயிரம் ஏக்கர் இருப்பதாகவும். அதில் 30% ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் நன்றாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.