கோவை: தமிழகத்தில் உள்ள 17 நலவாரியங்களில் தொழிலாளர் பதிவு அறிவிப்பை கட்டாயமாக்க வேண்டும் என, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: தமிழகத்தில் உள்ள 17 நலவாரியங்களில் தொழிலாளர் பதிவு அறிவிப்பை கட்டாயமாக்க வேண்டும் என, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உடலுழைப்பு தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூட்டம் சிங்காநல்லூரில் உள்ள எஸ்எம்எஸ் அலுவலகத்தில் நடந்தது.
எல்.பி.எஃப்., பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தற்போது அமலில் உள்ள 17 தொழில் வாரியங்களில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1.30 கோடி, பதிவு செய்ய தவறியவர்கள் 50 லட்சம் பேரும் உள்ளனர். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் கட்டாயம் நலவாரியங்களில் பதிவு செய்யவேண்டும் என்ற அறிவிப்பு பதிவை அரசு கட்டாயமாக்க வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள் புதுப்பிக்காத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் புதுப்பிக்க அரசு கவனம் செலுத்தவில்லை. கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தை கணக்கில் கொண்டு நலவாரியத்தில் புதுப்பித்தல் விடுபட்டு போனாலும் 2022 மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என்ற சிறப்பு அரசாணை வெளியிட்டு காலநீட்டிப்பு வழங்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்வதை முதலில் கைவிட வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற தகுதியானவர் என்ற நிபந்தனைகளை ரத்துசெய்து 2011 பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணை கடந்த பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் ஓய்வு ஊதியம் கிடைக்காதவர்களுக்கு வழங்கவில்லை. எனவே, கடந்த 2011 வரை நிபந்தனைகள் காரணமாக ஓய்வூதியம் மறுக்கப்பட்டவர்கள், தற்போது உயிருடன் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.
நோய்த்தொற்று காலத்தை முன்னிட்டு நலவாரியம் பதிவு புதுப்பித்தல் பணி கணினி மூலம் நடந்து வருகிறது. இதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளன. எனவே, பயோமெட்ரிக் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முருகேசன், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ், கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மனோகரன், ஐ.என்.டி யூ.சி., தொழிற்சங்கத்தின் தலைவர் சிரஞ்சீவி கண்ணன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.