கோவை: தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள் பெயரில் கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை: தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள் பெயரில் கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது;
"தொண்டாமுத்தூர் தொகுதியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலும், ஈசானா விஹார் பகுதிகளிலும் வசித்து வரும் மலைவாழ் மக்கள் வாக்களிக்கும் வகையில் முட்டத்துவயல் பகுதியில் உள்ள அரசு மலைவாழ் பள்ளியில் வாக்கு சாவடி எண் 51 அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு சாவடிகுட்பட்ட பாரதியார் வீதி, ஈசானா விஹார் வீதிகளில் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வார்டு எண் 5ல் வசிக்கும் அவர்கள் எந்தவித ரத்த சொந்தம் கொண்டவர்களோ அல்லது வாக்குரிமை பெறும் அளவிற்கு நிரந்தரமாக இங்கு வசிப்பவர்களோ அல்ல.
ஆனால், இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அவர்களுக்கு போலியான முகவரி கொடுத்து அதன் வாயிலாக அவர்களுக்கு வாக்குரிமை வழங்கி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரே வளாகத்திற்குள் 700 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 50க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் வசிப்பிடம் ஒரே முகவரியில் இருக்கிறது. எவ்வாறு அந்த குறிப்பிட்ட முகவரிகளில் 50 முதல் 100க்கும் மேற்பட்டோர் வசிக்க முடியும்?
எதன் அடிப்படையில் இவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.தொகுதிக்கும் இவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத போது என்ன நோக்கத்திற்காக யார் தலையீட்டின் அடிப்படையில் இந்த தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்பதை தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் உரிய விசாரணை நடத்தி உண்மையை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.
தேர்தலுக்கு வெறும் 6 நாட்களே உள்ள நிலையில் துரித விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேட்டை நீக்கி கள்ள ஓட்டு போடும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியை கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்படுள்ளது.