கோவை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உண்மையாக களப் பணியாற்றும் கட்சி தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மட்டும் தினமும் உதவித்தொகை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் வேட்பாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உண்மையாக களப் பணியாற்றும் கட்சி தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மட்டும் தினமும் உதவித்தொகை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் வேட்பாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் என்றாலே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு முடியும் வரை கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவது வழக்கம். காரணம், இந்த இடைப்பட்ட நாட்களில் தினமும் உணவு, டீ, காபி, உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்ந்து தொண்டர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால், இந்த தேர்தலில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தொண்டர்களை கண்காணிக்கவும், பணம் விநியோகம் செய்யவும் வேட்பாளர்கள் தரப்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பிரத்தியேக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து கட்சித் தொண்டர் ஒருவர் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே அனைத்து அரசியல் கட்சி அலுவலகங்களில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகிய உடன் அனைத்து அரசியல் கட்சி அலுவலகங்களில் பணிகள் துரிதமாக மேற்கொள்ள துவங்கின.
முதல் முறையாக எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் களப் பணியாற்றும் கட்சி தொண்டர்களை கண்காணிக்கவும் அவர்கள் பணி செய்வதை உறுதிப்படுத்தவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த முறை டிஜிட்டல் முறையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு தொண்டர்கள் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்கள் கண்காணிக்கப்படுவதுடன் தினமும் ஒவ்வொருவரும் கட்சி பணிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் கட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, களப்பணி மேற்கொள்ளும் தொண்டர்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரே தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்து அவற்றை உறுதி செய்து அதற்குப்பின் ஒவ்வொருநாளும் அவர்களுக்கான உதவித்தொகையை வழங்குகின்றனர். தினமும் ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இது தவிர பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரத்தின்போது அதிக தொண்டர்களை அழைத்து வருபவர்களுக்கு கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த முறை தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்ற காரணத்தினால், 'ஐடி விங்' என்று தனியாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பிரத்யேக பிரிவு துவக்கப்பட்டு அதற்கு பல்வேறு தொண்டர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இது தவிர தினமும் மதியம், இரவு உணவு வழங்குவது. ஒரு சில கட்சி வேட்பாளர்கள் சார்பில் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை வழங்கப்படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் களப்பணி மேற்கொள்பவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் செல்வதை உறுதியாக தெரிந்து கொண்டபின் அவர்களுக்கு கட்சி வேட்பாளர்கள் அலுவலகங்கள் சார்பில் பெட்ரோலுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் அனைவருக்கும் கிடைத்து விடாது, அவற்றை கண்காணிக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேல் கட்சி வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் தொண்டர்களுக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் களப்பணி மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுவதால் பெயரளவுக்கு பணி செய்வது போல் நடித்துவிட்டு தினமும் உதவித்தொகை பெற்று விடலாம் என்று இதுவரை எண்ணி செயல்பட்ட அனைத்து கட்சி உடன்பிறப்புகளுக்கும் இந்த தேர்தலில் வேட்பாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல, உண்மையாக உழைத்தாலும் அவரவர் அணிகளுக்கு என நியமிக்கப்பட்டுள்ள தலைவரிடம் இணக்கமாக செல்லாவிட்டால் வேட்பாளர்கள் தரப்பில் வழங்கப்படும் உதவித் தொகை களப்பணி மேற்கொள்ளும் தொண்டர்களுக்கு கிடைக்காது. இவை எல்லாவற்றுக்கும் மேல் சிறப்பு குழுக்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளவர்கள் மற்றும் தங்களுடைய நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேட்பாளர்கள் தரப்பில் சிறப்பு உளவுப்பிரிவு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
எனவே, இந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் டிஜிட்டல் முறையில் வேட்பாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தொடரும் என்பதால் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.