கோவை: விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாக்க குளிர் பதன கிடங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கோவை மாவட்டத்துக்கான வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாக்க குளிர் பதன கிடங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கோவை மாவட்ட வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கோவை மாவட்டத்துக்கான வாக்குறுதிகள் வருமாறு;
“கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பேருந்து நிலைய பணிகள் துரிதப்படுத்தப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
கோவையில் பிறந்து மக்களுக்கு பல்வேறு துறைகளில் சமூக தொண்டாற்றிய போயர் சமூக பெரியவர் கிருஷ்ணா போயருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். தொண்டாமுத்தூர் தொகுதி விவசாய நிலங்களையும் பயிர்களையும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வனத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்படும்.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசால் தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி, சரபங்கா, தாமிரபரணி-கருமேனியாறு, காவிரி-குண்டாறு, காவிரி உப வடிநில புனரமைப்பு, கல்லணைக் கால்வாய் புனரமைப்பு, கீழ்பவானி கால்வாய் புனரமைப்பு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எண்ணேகோல், ஜெர்த்தலாவ், அளியாளம் உள்ளிட்ட நீர் பாசனக் கால்வாய் திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்.
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பாதுகாக்க உலகத்தரத்திலான ஒருங்கிணைந்த குளிர்சாதன கிடங்கி மற்றும் பதப்படுத்தப்படும் கூடங்கள் அமைக்கப்படும். இக்கூடங்களை கண்டறிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் விவசாயிகள் கிடங்கியை சென்றடையும் வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக சர்வதேச தரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். போயர் மக்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.” இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.