கோவை: கொங்கு மண்டலம் நான் பிறந்த மண்டலம் என்பதால் இந்த மண்டலத்தில் தான் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
கோவை: கொங்கு மண்டலம் நான் பிறந்த மண்டலம் என்பதால் இந்த மண்டலத்தில் தான் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கும் நடிகர் மன்சூரலிகானின் வேட்புமனு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலரும் பேசி பேசியே நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டனர் என்று விமர்சித்தார். தேர்தல் இந்த தேதியில் வரும் என்று தெரிந்து கொண்டே முதலமைச்சர் சுமார் 4 மாதங்களுக்கு மேலாக 1000, 1500 காவலர்களுடன் இன்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் என்றால் சமத்துவமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியவர், முதலமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனிமனிதராக அவர்களது தொண்டர்களுடன் சென்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் ஒருபுறம் இன்னொரு மக்கள் கிராம சபை கூட்டம் என்று நடத்தி கொண்டு இரு தரப்பினரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். நான் தமிழ் தேசிய புலி கட்சியின் சார்பாக சுயேட்சையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.
கொங்கு மண்டலம் நான் பிறந்த மண்டலம் என்பதால் இந்த மண்டலத்தில் நான் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்த அவர், எங்கள் சின்னம் வந்தவுடன் பத்து பதினைந்து நாட்களுக்குள் அனைத்து மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அது மிகப்பெரிய சவால், அதை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பேன் என்ற அந்த நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று தெரிவித்தார்.
இது திப்பு சுல்தானின் புலி என்று கர்வமுடன் தெரிவித்த அவர், இலங்கையில் சிங்கள காரர்களால் கொன்றொழிக்கப்பட்ட அடிபட்ட புலி எனவும் இந்திய தேசிய விலங்கான புலி என்றும் தெரிவித்து அடிபட்ட வேங்கையாக கொங்குநாட்டு மக்களின் மனதில் இடம் பெறுவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், இது ராவண தேசம் பெரியாரின் தேசம் இந்த இடத்தில் காந்திஜி அவர்களின் ஒரு பாடலை பாட விரும்புகிறேன் என்று "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடலை பாடிக் காண்பித்தார். இந்த பாடல் மத ஒற்றுமையை வலியுறுத்தி இந்த பாடல் சமஸ்கிருத ஸ்லோகத்தில் இடம்பெற்றிருந்தது. அதை இப்பொழுது இருக்கின்ற சிலர் நீக்கிவிட்டதாக அறிகிறேன் என்றும் கூறினார். இந்த மதநல்லிணக்கம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மண்ணில் இந்து கிறிஸ்துவ இஸ்லாமிய அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு இருக்க தமிழ் தேசிய புலிகள் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.