கோவை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததும் பிக் பாஸில் நடிக்க சென்று விடுவார் என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் முடிந்ததும் பிக் பாஸில் நடிக்க சென்று விடுவார் என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.கவின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செயதியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், சென்ற முறை பாரதிய ஜனதா கட்சி கணிசமான வாக்குகளை பெற்று இருக்கும் தொகுதி என்பதால் இப்போது இரு கட்சிகளின் ஆதரவுடன் பெரும் வெற்றி அடைவோம் என்று தெரிவித்தார்.
சென்ற முறை தோல்வி அடைந்திருந்தாலும் தொடர்ந்து 5 ஆண்டுகாலமாக மக்களுடன் பயணித்து வருவதாக கூறிய அவர், ஏற்கனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக இருக்கும் கோவையை சர்வதேச நகரம் என்ற தரத்திற்கு உயர்த்த பாடுபடுவோம் என்றார்.
அதேபோல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரான எஸ்.பி. வேலுமணி, தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் தனக்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் வேண்டுமானால் சாதித்து இருக்கலாம். ஆனால், தேர்தலில் மக்களுடன் பயணித்து வரும் பாரதிய ஜனதா கட்சி தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும், தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அதை எல்லோரும் புரிந்துகொள்ளலாம் என்றும், தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் கமல்ஹாசன் பிக் பாஸிலும், புது படங்களிலும் நடிக்க சென்றுவிடுவார் என்று கூறினார்.
அதேபோல, கேஸ் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.