பணம், பரிசுப் பொருட்களை நம்பி களம் காணவில்லை, மக்களை நம்பி களம் காண்கிறேன் - திமுக தொண்டமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி
நான் பணத்தை நம்பியோ, பரிசுப்பொருட்களை நம்பியோ இங்கே களம் காணவில்லை.தொகுதி மக்களாகிய உங்களை நம்பி மட்டுமே தேர்தலை சந்திக்கிறேன்
கோவை: ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் சூழலில் திமுக-வும் தனது வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
குறிப்பாக, கோவையின் முக்கியமான தொகுதியாக கருதப்படும் தொண்டாமுத்தூர் தொகுதியில், உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி வேலுமணியை எதிர்த்து, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர், கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கார்த்திகேய சிவசேனாபதி கூறிருப்பதாவது:
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டமுத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ள தலைவர் அவர்களுக்கும், கழக தலைமைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அதிக ஊழல் செய்த அமைச்சரின் தொகுதியில் அவரை எதிர்த்து தலைவரின் ஆசியோடும் தொண்டாமுத்தூர் தொகுதியின் மாவட்ட, மாநகர செயலாளர்கள் முதல் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்,சிற்றூர், ஊராட்சி மற்றும் வார்டு செயலாளர்கள் வரையுள்ள அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும், அவர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவது முக்கியமானது.
நம் உரிமைகளை மீட்க, அதிமுகவை வீழ்த்த வேண்டும்
ஏனெனில், கடந்த பத்தண்டுகளாகத் தமிழகம் சந்தித்து வரும் இன்னல்கள், வளர்ச்சி பாதிப்புகள், மாநில உரிமை பறிபோவது என்று ஏராளமான சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறோம். பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்டு, அதிமுக நம்மை மத்திய அரசிற்கு அடமானம் வைத்து விட்டது.
அமைச்சரின் ஊழல்
குறிப்பாக அதிமுக அமைச்சராக இருக்கும் எஸ் பி வேலுமணியின் ஊழல்களும், அராஜகங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல.
பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து மக்களை ஏமாற்றி வருகிறார். இவரின் பினாமிகள் சொத்து உயரவும், தன்னுடைய சொத்து மதிப்பைக் கூட்டிக்கொள்ளவும் மட்டுமே இவர் அமைச்சராக இருந்து வருகிறார்.
தொகுதிக்குள் தனது அராஜகத்தால் மக்களை மிரட்டுவது, இயற்கை வளங்களை சுரண்டிக் கொள்ளையடிப்பது, ஏதேனும் உள்ளூர் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு காவல் நிலையம் செல்வோரை மிரட்டி அவர்களின் மேல் கொலை முயற்சி செய்வது, போன்ற பல ரவுடித்தனங்களை செய்து வருகிறார். கூடுதலாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இவருக்கு நெருக்கமானவர்களே கைது செய்யப்படுள்ளார்கள். அந்த வகையில், இவரால் தொண்டமுத்தூர் மக்கள் மிகுந்த தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர், என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
பணத்தை அல்ல மக்களை நம்பி களம் காண்கிறேன்
இந்த நிலையில், தான் கொள்ளையடித்து வைத்துள்ள பணபலத்தை நம்பி வலம் வரும் திரு. வேலுமணி அவர்கள் ஒரு ஓட்டிற்கு ஆயிரக்கணக்கில் கூட தர திட்டமிட்டிருப்பதாகவும், பல பரிசுப் பொருட்களை தொகுதி முழுக்க விநியோகம் செய்யவுள்ளதாகவும் தொகுதிக்குள் பேச்சுகள் அடிபடுகின்றன. பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி தனது குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம், என்று நினைக்கிறார்.
ஆனால், நான் பணத்தை நம்பியோ,பரிசுப்பொருட்களை நம்பியோ இங்கே களம் காணவில்லை. தொகுதி மக்களாகிய உங்களை நம்பி மட்டுமே தேர்தலை சந்திக்கிறேன். என்னிடம் பணம் இல்லை, ஆனால் மக்களின் மனங்களை வென்று அவர்களின் தேவைகள் நிறைவேற உழைப்பேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்.
மக்கள் என்றும் நீதியின் பக்கம் நிற்பார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கையில் களம் காண்கிறேன்.
என்றும் தொகுதி மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பவனாக,அவர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்கக் கூடிய மக்கள் நண்பனாகவும் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த தேர்தலுக்குப் பிறகு திரு. SP வேலுமணி அவரின் மேலுள்ள ஊழல் வழக்கிற்காக நீதிமன்றம், சிறை என செல்ல வேண்டியிருக்கும். எனவே, தொகுதியை கவனிப்பது என்பது நடக்காத ஒன்று அதற்கு வாய்ப்பும் இல்லை. எனவே, நாட்டில் அநியாயங்கள் நடக்கும் போதெல்லாம் கோவை மக்கள் அதனை எதிர்த்து நின்றார்கள் என்ற வரலாற்றை தொடரச் செய்திடுவோம்.
கோவைக்கு நான் புதிதல்ல..!
திரு. சிவசேனாபதி மற்றும் திருமதி. சரஸ்வதி ஆகியோருக்கு மூத்த மகனாக 18.10.1972 அன்று இதே கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் தான் பிறந்தேன். RS புரம் சண்முகம் வீதியில் தான் வளர்ந்தேன். தொகுதிக்குள்ளேயே இருக்கும் பாரதி வித்யாபவன் பள்ளியில் தான் படித்தேன்.அன்னபூர்ணா, அய்யர் & கோ பேக்கரி என என் வாழ்வின் பசுமையான பல நினைவுகள் இங்கேதான் நிறைந்துள்ளது.
மேலும், காந்தி பார்க்கில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பமாய் சென்று வருவது, என அனைத்துமே கோவையையும் தொண்டாமுத்தூரையும் சார்ந்தே இருந்துள்ளேன். பாரம்பரியக் காளைகளை பேணிக் காக்கும் நோக்கில் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை நிறுவி நிர்வகித்து வருகிறேன்.
எனது மகளும் இங்கே கோவையில் தான் படித்து வருகிறார். எனவே, நான் தொகுதிக்கோ அல்லது கோவைக்கோ புது நபர் அல்ல. உங்களில் ஒருவன் தான் நான். நானும் கோவை மண்ணின் மைந்தன் என்பதை நினைவுக்கூற விரும்புகிறேன்.
மேலும், பிற கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் இங்கே போட்டியிடுகிறார்கள். ஆனால், மற்ற அனைவரையும் விட மக்களுக்காக களத்தில் நிற்பது திமுக மட்டுமே என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
அடிமை ஆட்சி அதிமுக அரசையும், ஊழலில் திளைத்து கொள்ளையடித்த திரு. SP வேலுமணி அவர்களையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் அவரை டெபாசிட் இழக்கச் செய்து, இந்த தேர்தலில் திமுக வேட்பாளராகிய என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுமாய் தொண்டமுத்தூர் தொகுதி மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் அவர்கள் தமிழக வளர்ச்சிக்கான பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளார். ஆகவே, தலைவர் தலைமையில் கழக ஆட்சி அமைத்திடுவோம், தமிழகம் தலை நிமிரச் செய்திடுவோம்.
சிந்தீப்பீர், வாக்களிப்பீர். நமது சின்னம் உதயசூரியன்." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.