கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த தொகுதியினை கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். எனவே, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியினை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என பாஜகவினர் அதிமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.கவின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதனையறிந்த அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 பகுதி செயலாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிளை செயலாளர்கள் அனைவரும் ராஜினாமா கடிதத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சட்டையை கழற்றி தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், தற்போதைய எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கே இந்த தொகுதியினை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், கூட்டணி கட்சியினருக்கு இந்த தொகுதியினை வழங்கினால் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினர்.
அதிமுக நிர்வாகிகளின் போராட்டம் காரணமாக கோவை அதிமுக அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.