பொள்ளாச்சி: தமிழகத்தின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி: தமிழகத்தின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்கும்விதமாக, சிறந்த காவல் நிலையம் கண்டறியப்பட்டு விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் மேற்கு மண்டலப் பகுதிகளில் சிறந்த காவல் நிலையங்களை கணக்கெடுக்கும் பணியில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்தை, டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் கூறுகையில், `தமிழக அரசின் சார்பில் சிறந்த காவல் காவல் நிலையங்களுக்கு விருது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் நிலையங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
பின்னர் மேற்கு மண்டலத்தில் தேர்வு செய்யப்படும் சிறந்த காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அதில் இரண்டு சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுக்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.