நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 3 சட்டப்பேரவை தொகுதிக்கு முதற்கட்ட சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 3 சட்டப்பேரவை தொகுதிக்கு முதற்கட்ட சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் கிடங்கினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து, கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5,85,049 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதியில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் என மொத்தம் 3,845 இயந்திரங்கள் உள்ளன.
மேலும், அந்தந்த சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலா 45 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
உதகை சட்டப்பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரிக்ஸ் பள்ளியிலும், கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிசிடிவி கேமரா, வெப்கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் முழுமையான மற்றும் சரியான பாதுகாப்புகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோனிகாரானா, ரஞ்சித்சிங், ராஜ்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.