கோவை: பாசிசம் வெற்றி பெற்றால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.
கோவை: பாசிசம் வெற்றி பெற்றால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.
கோவை மாநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கம் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட அமரர் பாலதண்டாயுதம் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பாலதண்டாயுதம் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா திறந்து வைத்தார். எஸ்.கண்ணன் நினைவரங்கத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திறந்து வைத்தார். நினைவு கல்வெட்டை கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா பேசுகையில்,
இந்தியாவை காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன்னால் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி பாசிச கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. இந்தியாவில் பாசிசம் வெற்றி பெற்றால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும், கேரளத்திலும் நடைபெறும் தேர்தல் பா.ஜ.க.விற்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
அதேபோல, மேற்கு வங்கம் சென்றாலும் அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை மேற்கோள் காட்டுகிறார்.
கேரளத்திலும் அதே போல் பேசி வருகிறார்கள். ஒரு நாடு ஒரு கலாச்சாரம் என்ற கொள்கை உடையவர்கள் மாநிலத்துக்கு மாநிலம் அந்த மாநில மக்களுடைய கலாச்சாரத்தை முன்வைப்பதன் நோக்கம் என்ன ? அவர்கள் நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்கிறார்களா ? நாட்டின் பன்முகத்தன்மையை ஒருபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடியுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டின் நலன் பற்றி யாராவது பேசினால் அது ஏமாற்று தான் என்றார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்த கூட்டணி வெற்றி பெறுவதுதான் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் நலனுக்கும் நல்லது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி, அரசியல் பொருளாதார சமத்துவம் இவற்றை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் பெறுவதற்கான கொள்கைகளை முன்வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்றும் டி. ராஜா கூறினார்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசினார். அவர் பேசும்போது, ' நாட்டை வகுப்புவாத பேரபாயம் சூழ்ந்துள்ளது. அது எல்லா வகையான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
பாண்டிச்சேரியில் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி உள்ளார்கள். தமிழகத்திலும் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதை பயன்படுத்தி காலூன்ற முயற்சிக்கிறது. வகுப்பாக சக்தி தமிழகத்தில் கால் ஊன்றாமல் தடுப்பது நம்முடைய முக்கியமான கடமையாக உள்ளது.
எனவேதான் மதுரை மாநாட்டில் வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அதன் அடிப்படையில்தான் தி.மு.க.வுடனான தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளோம். எனவே, இந்தத் தேர்தலில் லட்சியம் தான் முன்னால் நிற்கிறது. எனவே, லட்சியம் நிறைவேற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். கிழக்கு மண்டல செயலாளர் மு.வ. கல்யாணசுந்தரம் வரவேற்றுப் பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செல்வம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநகர தலைவர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜே.இலக்கியன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.தனபால், பாலநகர் நற்பணி மன்ற தலைவர் கே.உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர். தேவராஜ், சி.சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜி.நாராயணசாமி, யு.கே.சுப்பிரமணியம், என்.ராமசாமி, ரா. ஜீவபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஏ. வேலுசாமி நன்றி கூறினார்.