கோவை: கேரளா மற்றும் கோவை என இரு மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தலை நல்லப்படியாக நடத்த கேரளா மாநிலம் பாலக்காட்டில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளோம், என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: கேரளா மற்றும் கோவை என இரு மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தலை நல்லப்படியாக நடத்த கேரளா மாநிலம் பாலக்காட்டில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளோம், என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர்: கோவையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கேரளா மாநில எல்லைப்பகுதியை ஒட்டி உள்ளது. 2 மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் விதிமுறைகளை மீறாமல் இருக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், கேரளா மாநிலம், பாலக்காட்டில் அதிகாரிகளுடன் அலோசனை கூட்டம் நடத்த உள்ளோம்.
பறக்கும் படையினர்
இன்று முதல் பறக்கும் படையினர், தீவிரமாக தங்களது பணிகளை மேற்கொள்வார்கள். கோவை மாவட்டத்தில் செலவினக் கண்காணிப்புக்காக 30 பறக்கும் படை குழுக்கள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 20 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தேவைக்கு ஏற்ப மீண்டும் அதிகப்படுத்தப்படும்.
விளம்பரங்கள் அகற்றம்
கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் அரசியில் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இன்னும், ஒரு சில இடங்களில் விடுபட்டிருந்த டிஸ்பிளே மெட்டிரியல்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தபால் வாக்கு
கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 64,650 பேர் மற்றும் 20,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். லதேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் சமயத்தில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்கள் வரும் 16ம் தேதிக்குள் வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச் சாவடி அலுவலரிடம் அளிப்பார்கள். பத்திரிக்கையாளர்களுக்கும் தபால் வாக்கு இருந்தால், அதனை செயல்படுத்துவோம்.
கோவையில் 1085 கூடுதல் வாக்குச்சாவடிகள்
கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த முறை 975 மையங்கள் இருந்தன. எனவே, இந்த முறை, கடந்த தேர்தலை காட்டிலும் 1085 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படுகிறது. இவற்றில், பெருவாரியாக வாக்கு சாவடிகள் மாநகராட்சி பகுதியில் தான் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் வாக்குச்சாவடிகளின் தூரத்தை குறைக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான மையங்கள்
காவல்துறை, வருவாய்துறையினர் அறிக்கைப்படி 788 வாக்கு சாவடிகளில், 112 மையங்கள் பதற்றமானவை, என்று கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலான வாக்குக்காளர்கள், ஒரே மையத்தில் வரக்கூடிய சூழ்நிலையில் தான் இது பதற்றமானவை. சட்டம் ஒழுங்கில் பதற்றமான வாக்குச்சாவடிகள், இல்லை.
24/7 கட்டுப்பாட்டு அறை
சுதந்திரமான வெளிப்படையான தேர்தல் நடத்த உள்ளோம். சந்தேகங்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை 24 நேரமும் செயல்படும். சி-விஜில் செயலி மூலமும் புகார் அளிக்கலாம். இதுவரை, கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் 85 புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புகார் தருபவர்களுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு
வாக்காளர் அடையாள அட்டை, முதியோருக்கான தபால் வாக்கு தொடர்பான தகவல்களை கேட்கவும், விளம்பர பதாதைகள், பரிசு பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை அளிக்கவும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளன.
தேர்தல் நடத்தை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பரிசு பொருட்கள் உள்ளிட்டவை விநியோகித்தால் சீல் வைக்கப்படும். மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 15 புகார்கள் வந்துள்ளன. புகார் தருபவர்களுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்கப்படும்.
100% வாக்குபதிவுக்கு விழிப்புணர்வு
வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் வசதிக்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். கோவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் என்.ஜி.ஒக்கள், தன்னார்வலர்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்துச் செல்லும் போது ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும். இதனை கண்காணிக்க நொடல் ஆபிசர்கள் நியமிக்கப்படுவார்கள். வியாபாரிகளை சொந்தரவு செய்யக்கூடாது என்பதிலும் கவனமாக, இருக்கிறோம்.
மொத்தமாக மது வாங்க தடை
டாஸ்மாக் கடைகளில், மொத்தமாக மது வாங்கக்கூடாது, விற்பனை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க நொடல் ஆபிசர் நியமிக்கப்படுவார். கல்யாண மண்டபம், ஹோட்டல் உள்ளிட்டவற்றில் கூட்டம் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும், அரசியல் கட்சியினர் தங்க ஏற்பாடு செய்யப்படும். வனத்துறை தகவலின் படி சுமார் 50 வாக்குச்சாவடிகள் வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. அங்கு சிரமங்களை தவிர்க்க காவல்துறையினர், வருவாய் அலுவலர்கள் நியமிக்கபடுவார்கள், என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியான, ராஜாமணி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாவட்ட எஸ்.பி அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.