கோவை: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.24.71 கோடியில் அமைக்கப்பட்ட மாதிரி சாலையை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.24.71 கோடியில் அமைக்கப்பட்ட மாதிரி சாலையை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.24.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாதிரி சாலையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-
சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியில் அதிநவீன சாலைகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத்திடல், தெருவிளக்குகள், சாலையோர நடைபாதைகள் என பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும், சீர்மிகு நகர திட்டத்தின் முத்தாய்ப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கி வரும் ஆர்.எஸ்.புரம், திவான்பகதூர் சாலையை மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அடங்கிய மாதிரி சாலையாக மாற்றி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி சாலையானது சுமார் 1.8 கிலோ மீட்டர் தூரம் மேம்படுத்தப்பட்டு மாநகர சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும், பகுதி சார்ந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது நகாப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து கையேடு விதிகளின்படி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாலையின் இருபுறமும் கிரானைட் கற்களால் செய்யப்பட்ட தடையில்லா மற்றும் சீரான அகலமான பாதசாரி நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு, குடிநீர் விநியோகம், கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடி வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடு மற்றும் வணிக கட்டிடத்துக்கும் தனி ஏற்பாடு மற்றும் வழித்தடம் மூலம் மின்சாரம், தகவல் தொடர்புகள், குடிநீர் விநியோகம், கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடி வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை பழுதுபார்க்கும் பணி முற்றிலும் தவிர்க்கப்பட்டு தடையற்ற விநியோகம், இயக்கம் மற்றும் பராமரிப்பு எளிதாகிறது.
மேலும், சீரான இடைவெளியில் கண்கவரும் தெருவிளக்குகள் மற்றும் நடைபாதை விளக்குகள் நிறுவப்பட்டுள்ளது. ஒளிமிளிரும் தடுப்பு வேலிகள் மற்றும் ஒளியில்லா கான்கிரீட் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறுக்குச்சாலையின் சந்திப்புகளும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் விளம்பரப் பலகைகள், வழிகண்டறியும் வரைபட பலகைகள், உள்ளூர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்று பலகைகள், திருக்குறள் மற்றும் அதன் விளக்கவுரை பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெறிமுறைகள், தெருப் பெயர்கள், பேருந்து நிறுத்துமிடம், எச்சரிக்கை பலகைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மக்கும் மற்றும் மக்கா குப்பைத் தொட்டிகள் அமைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கிரானைட் இருக்கைகள் மற்றும் மரங்களைச் சுற்றி துளையிடப்பட்ட சல்லடை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சாலையின் மையப்பகுதியில் லண்டனில் உள்ளது போல் அலங்காரக் கடிகாரம் மற்றும் செல்ஃபி ஸ்பாட் (Selfie Spot) நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, முதன்மை செயல் அலுவலர் ஸ்மார்ட் சிட்டி நா.ராஜகுமார், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் டி.சிவசுப்பிரமணியம், செயற்பொறியாளர் (ஸ்மார்ட்சிட்டி) சரவணக்குமார், உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன், உதவி செயற்பொறியாளா் சு.கு.சுகந்தி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.