தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவையில் கூடுதலாக 1,379 வாக்குச் சாவடிகள் அதிகாரிகள் தகவல்.
கோவை: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கோவையில் கூடுதலாக 1,379 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் வாக்குச்சாவடிகள்
ஏற்கனவே, கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் 979 வாக்குப் பதிவு மையங்களில், 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதலாக 1,379 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுகிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் தொகுதியில் 670 வாக்குச்சாவடிகள்
அதன்படி, தற்போது மொத்தமாக,1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 670 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள்கூறுகையில்: கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் கூடுதலாக அமைக்கப்பட வேண்டிய வாக்குப் பதிவு மையங்கள், வாக்குச் சாவடிகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 10 தொகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருந்தன. தற்போது, வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,’’என்றனர்.