கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் விரைவில் முடிந்து அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் விரைவில் முடிந்து அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரூ.42 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார்பார்க்கிங்
கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார்பார்க்கிங் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 11 ஆயிரம் சதுர மீட்டரில் 1,990 இருசக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் கூடிய மல்டிலெவல் பார்க்கிங் கட்ட ரூ.69.80 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
4 அடுக்கு பார்க்கிங் வசதி
இதைத்தொடர்ந்து, மல்டிலெவல் பார்க்கிங் கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகத்தினரே கட்டி பராமரிப்புக்காக தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் முதல் கட்டமாக 370 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டிட பணிகள் மேற்கொள்ளப்படும். 4 அடுக்கு கொண்டதாக இது அமைக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் இந்த திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் துவங்கி கட்டி வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் பார்க்கிங் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மார்ச் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்,’’ என்றனர்.