கோவை: கோவை குளத்தில் முகம் பிளாஸ்டிக் பை மூடப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாகக் கிடந்தார். அவர் இறந்து கிடந்த இடம் மூன்று காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் குழப்பம் நீடிக்கிறது.
கோவை: கோவை குளத்தில் முகம் பிளாஸ்டிக் பை மூடப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாகக் கிடந்தார். அவர் இறந்து கிடந்த இடம் மூன்று காவல்நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் குழப்பம் நீடிக்கிறது.
கோவை வீரகேரளம் பகுதியில் நாகராஜபுரம் குளம் உள்ளது. இன்று காலை அந்தக் குளத்தின் வழியாகச் சென்றவர்கள் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரது பிணம் முகத்தில் பாலித்தீன் கவரால் மூடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற இடம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, செல்வபுரம் என மூன்று போலீஸ் ஸ்டேஷன் எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். குளத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருவதால் யார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்துவது என குழப்பம் எழுந்தது. இதனால் விசாரணை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே பிணம் மீட்கப்பட்டு குளத்தின் கரையில் வைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருகிறது என முடிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை அறிவித்த பின்னர்தான் விசாரணை துவங்குவார்கள் என்று தெரிகிறது.
பிணமாகக் கிடந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து குளத்தில் வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை. போலீசாரின் எல்லைக் குழப்பத்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.