கோவை: பள்ளிவாசல் அமைப்பதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்று சிறுபான்மை நலவாரிய துணைத்தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோவை கலெக்டரிடம் கோரிக்கை விடப்பட்டது.
கோவை: பள்ளிவாசல் அமைப்பதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்று சிறுபான்மை நலவாரிய துணைத்தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோவை கலெக்டரிடம் கோரிக்கை விடப்பட்டது.
கோவையில் சிறுபான்மையின மக்கள் வருடாந்திர ஆய்வுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, புதுடெல்லியில் இருந்து வருகை தந்த தேசிய சிறுபான்மை நலவாரிய துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அழைப்பியல் பொறுப்பாளர் இமாம் அபுதாஹிர் பத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும், மூடிக்கிடக்கும் உருது பள்ளியை திறக்க வேண்டும், ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு நிலங்களை மீட்டுத் தரவேண்டும், 20 ஆண்டுகள் காலியாக உள்ள மாவட்ட காஜி பதவியை நிரப்ப வேண்டும், இஸ்லாமிய மாணவர்களுக்கு உடனடியாக ஸ்காலர்ஷிப் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டன.
கரும்புக்கடையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, உயர்நிலைப்பள்ளி, மாணவர்களுக்கு நூலகம், விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் அமைத்துக் கொடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டும் தேசிய சிறுபான்மை நலத்துறை தலைவரிடம் இதே வேண்டுகோள் விடப்பட்டது நினைவு கூரப்பட்டது.
கோவை நகரில் முஸ்லிம்கள் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல் அமைக்க நிறைய தடைகள் உள்ளதால் அதில் கலெக்டர் உடனடியாக தலையிட்டு நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக விமான நிலையம், ஹோப்ஸ் பீளமேடு, பி.என்.புதூர், வடவள்ளி, சாய்பாபா காலனி போன்ற பகுதிகளில் பள்ளிவாசல் கட்ட பல தடைகள் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரிவர கிடைக்கப் பெறவில்லை என்ற தகவல் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் திட்டத்தின்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிறைய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை தேசிய துணைத் தலைவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ். படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் பி.எச்.டி. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களது தகுதிக்கு ஏற்ப கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்று தகவல் பதிவு செய்யப்பட்ட நிலையில் தேவையுடைய, தகுதியுடைய மாணவர்கள் உதவித்தொகை கிடைக்காவிட்டால்உடனடியாக தம்மைத் தொடர்பு கொள்ளும்படி தேசிய சிறுபான்மை நல பிரிவு துணைத் தலைவர் கூறினார். அவரது இமெயில் ஐடி [email protected]ஆகும். இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
வீடில்லாதவர்களுக்கு இடமிருந்தால் பிரதம மந்திரி திட்டத்தின்படி இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று கலெக்டர் குறிப்பிட்டார். இடம், வீடில்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்றும் அதற்கான படிவங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் கலெக்டர் கூறினார்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்லறைத் தோட்டங்கள் கட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளதாக கிறிஸ்தவ அமைப்பினர் கூறினர். உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதியளித்தார்.
கூட்டத்திற்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்தும் சர்வ மதத் தலைவர்கள், இஸ்லாமிய கூட்டமைப்பினர், பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத், மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோவை மாநகர அமைதிக்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என்று உறுதியளித்தனர்.