கோவை: மனநோயால் பாதிக்கப்பட்டு மகள் இறந்து போன நிலையில் கணவருக்கு பக்கவாத பாதிப்பும், திருமணமான மகன்களுக்கு பார்வைக்கோளாறும் ஏற்பட்டு நிர்க்கதியான மூதாட்டி தனது தள்ளாடும் வயதில் கோவை ரங்கே கவுடர் வீதியில் சுக்கு காபி கடை நடத்தி குடும்பத்தைக் காக்க போராடி வருகிறார்.
கோவை: மனநோயால் பாதிக்கப்பட்டு மகள் இறந்து போன நிலையில் கணவருக்கு பக்கவாத பாதிப்பும், திருமணமான மகன்களுக்கும் பார்வைக்கோளாறு ஏற்பட்டு நிர்க்கதியான மூதாட்டி தனது தள்ளாடும் வயதில் கோவை ரங்கே கவுடர் வீதியில் சுக்கு காபி கடை நடத்தி குடும்பத்தைக் காக்க போராடி வருகிறார்.
கோவை மாநகரில் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் பகுதிகளில் ரங்கே கவுடர் பகுதியும் ஒன்று. நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் செயல்படும் இந்தப் பகுதியில் பல்வேறு கனவுகளுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் தனது வாலிப வயதில் கோவை வந்து சுக்கு காபியை கடை தொடங்கினார்.
ரங்கே கவுடர் வீதியில் ரோட்டோரத்தில் சிறிய இடத்தில் சுக்கு காபி விற்கும் பணியைத் துவக்கிய அவர் தினமும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். இவரது கனிவான பேச்சு, தொழில்மீது இவர் கொண்ட ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளால் வியாபாரம் தொடங்கிய வெகு சில நாட்களிலேயே ரங்கே கவுடர் வீதியில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் நல்ல நண்பரானார் குருசாமி.
தினமும் காலை இவரிடம் வந்து ஒரு சுக்கு காபியும், மாலையில் கிழங்கு அல்லது சுண்டல் என ஏதேனும் ஒன்றைச் சாப்பிடாவிட்டால் அன்றையதினம் முழுமையாகாது என்று வணிகர்கள் கூறுமளவுக்கு தரமாகவும், சுவையாகவும் வியாபாரம் நடத்தி வந்தார்.
பெரிய அளவில் லாபம் சம்பாதிக்காவிட்டாலும் அவரை நம்பியுள்ள மனைவி சரஸ்வதி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் மிகவும் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்தி வந்தார். மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணத்தை நடத்தி விட்டு அவரது முதுமைக் காலத்தை தனது மனைவியுடன் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்துவந்த குருசாமியின் வாழ்க்கை திடீரென சூறாவளி தாக்கியது போல அடுத்தடுத்து பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
ஆம்... அவரது இரண்டு மகன்களுக்கும் பார்வைக் குறைபாடு ஏற்பட அவரது மகள் மன நோயால் பாதிக்கப்பட்டார். மகன்களின் நிலைமையைக் கண்டு அவர்களது மனைவிகள் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த துயரச் சம்பவங்களால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான குருசாமிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். கடந்த ஆண்டு மனநோயால் பாதிக்கப்பட்ட அவரது மகளும் இறந்துவிட குருசாமியின் குடும்பத்துக்கு துயரத்துக்கு மேல் துயரம் என்ற நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் இதுவரை இல்லத்தரசியாக இருந்துவந்த குருசாமியின் மனைவி சரஸ்வதியின் தலையில் பொறுப்பு சுமத்தப்பட்டது.கட்டிய கணவரையும் இரண்டு மகன்களைக் காப்பாற்றவும் பேரக் குழந்தைகளின் கல்விக்கு உதவவும் சரஸ்வதி முடிவு செய்தார். கணவர் குருசாமி வியாபாரம் செய்து வந்த அதே இடத்தில் சுக்கு காபி கடையைத் தொடங்கினார்.
நோய்வாய்ப்பட்ட கணவர் மற்றும் இரண்டு மகன்களை ஊரில் விட்டுவிட்டு சரஸ்வதி அம்மா மட்டும் தனியே ரங்கே கவுடர் வீதியில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்டு அதில் தங்கியபடி சுக்கு காபி கடையை நடத்தி வருகிறார்.
இவரது நிலைமையைக் கண்டு ரங்கே கவுடர் வீதியில் உள்ள வணிகர்கள் தினமும் அவர் விற்பனை செய்யும் சுக்கு காபி மற்றும் கிழங்கு, சுண்டல் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
பள்ளி விடுமுறை என்பதால் அவரது பேரன் சரஸ்வதி அம்மாவுக்கு துணையாக சிறு சிறு உதவிகளைச் செய்து வருகிறான். சோதனைகளை எதிர்த்து போராடிவரும் மூதாட்டி சரஸ்வதியிடம் பேசியபோது அவர் கூறியதாவது:-
எனது கணவர் குருசாமி கடந்த 50 ஆண்டுகளாக ரங்கே கவுடர் வீதியில் ரோட்டின் ஓரத்தில் ஒரு சிறிய இடத்தில் சுக்கு காபி வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு எங்களது பூர்வீகமான மதுரையில் உள்ள வீட்டில் உள்ளார். அவருக்கு 75 வயதைக் கடந்து விட்டது. அவருடன் எனது இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் பார்வைக் குறைபாடு உள்ளதால் வேலைக்குச் செல்ல முடியாமல் எனது கணவருடன் சேர்ந்து வசித்து வருகின்றனர்.
நான் இங்கே சம்பாதிப்பதில் மீதம் எடுத்து அவர்களுக்கு அனுப்பி வைப்பேன். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் வெறும் கஞ்சியை குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
எனக்கு வயது 65 -ஐக் கடந்துவிட்டது, என்னால் இந்த வியாபாரம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமப் படுகிறேன். இதற்கிடையே கடந்த ஆண்டு எனது மகள் மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டாள். என் பரிதாப நிலையைக் கண்டு இங்குள்ள வணிகர்கள் சிலர் நான் தயாரிக்கும் சுக்கு காபி, கிழங்கு மற்றும் சுண்டலை வாங்கி உதவி வருகின்றனர்.
என் போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது. என்னால் முடிந்தவரை எனது கணவரையும் மகன்களையும் காப்பாற்றுவேன். தற்போது போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறேன். என்னையும் என் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள ஏதேனும் உதவி கிடைத்தால் என் கடைசி காலத்தையாவது நிம்மதியாக கடத்துவேன்." இவ்வாறு அவர் கூறினார்.

ரங்கே கவுடர் வீதியில் ஆட்டோ ஓட்டி வரும் செந்தில்குமார் என்பவர் கூறும்போது, `எனது பூர்வீகம் இதே பகுதிதான். நான் சிறு வயது முதல் குருசாமி ஐயாவைப் பார்த்திருக்கிறேன். அவர் சுறுசுறுப்பாக தினமும் தொழில் செய்து வந்தார். அவரது மகள் மன நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவரது இரண்டு மகன்களும் பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குருசாமி அய்யாவும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பரிதாப நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.
எங்களால் முடிந்த உதவியை அவ்வப்போது சரஸ்வதி அம்மாவுக்கு செய்துவருகிறோம். அவர்கள் ரொம்ப பாவம். இந்த வயதிலும் மிகுந்த சிரமத்துக்கு நடுவே தினமும் வியாபாரம் செய்து வருகிறார். ஏதேனும் நல்லுள்ளங்கள் அவருக்கு உதவி செய்தால் அதைவிட சந்தோஷம் எங்களுக்கு வேறு எதுவும் இருக்காது' என்றார்.
உதவும் கரங்கள் யாராவது உதவினால் இந்த மூதாட்டி மட்டுமல்ல, இவரது ஒட்டுமொத்த குடும்பமும் நிம்மதியாக வாழ்வைக் கழிக்கலாம். அரசாங்கமும் இவர்கள் விஷயத்தில் முடிந்த உதவிகளைச் செய்யலாம்.