கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சமீபத்தில், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கல்யாணராமன், இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத பிரச்சனையை தூண்டும் விதமாக அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருடைய ஜாமீன் மனு இரண்டாவது முறையாக கோவை கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்பேரில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கல்யாணராமன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதற்கான நகல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்யாணராமனிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 31-01-2021 அன்று மாலை 5 மணி முதல் 6:20 மணி வரை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி தியேட்டர் எதிரே உள்ள அன்னூர் சாலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுமார் 400 முதல் 500 பேர் கலந்துகொண்ட கட்சியின் நகர தலைவர் உமாசங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, சிறப்புரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத பிரச்சனையை தூண்டும் விதமாக தரக்குறைவாக பேசியும் இழிவுபடுத்தியும் அக்கூட்டத்தில் கல், கத்தி, கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி கோசங்கள் போட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டது, தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலைய குற்ற எண் 109/2021 U/S 147,148,149,323,504,505(ii),153(A),153(B) & 269 IPC @ 147,148,149,324,353,506(ii),307 & 109 IPC இன் படி பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 01.02.2021 அன்று கல்யாணராமன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று 11.02.2021 ஆம் தேதி மேற்படி கல்யாணராமனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படியாக கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் Cr.M.P.No.01/G/2021/E1 படி பிறப்பித்த உத்தரவின் நகலை கல்யாணராமனுக்கு 11.02.2021 ஆம் தேதி மாலை 17.15 மணிக்கு ஈரோடு மாவட்ட சிறைச்சாலையில் வைத்து சார்பு செய்து TPDA No. 701/2021 இன் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்நகொள்ளப்பட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது.