கோவை: தேசிய பாதுகாப்பு படை சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
கோவை: தேசிய பாதுகாப்பு படை சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
தேசிய பாதுகாப்பு படை சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு, விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். கோவை ஈஷா யோகா மையத்தில் இதுபோன்றதொரு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று இரவு 7.30 மணிக்கு துவங்கியது. 'அலர்ட்' தகவல் கிடைத்ததும், ஆலாந்துறை மற்றும் புறநகர் போலீசார் 20 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, ஒத்திகையில் ஈடுபட்டனர். மருத்துவக் குழு, வருவாய்த்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் எவ்வளவு நேரத்தில் விரைவாக செயல்பட்டனர் என்பது கணக்கிடப்பட்டது.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பேர் அடங்கிய குழுவினர், கடந்த வாரம் முதல் கோவையில் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். சூலுார் விமானப்படை தளத்திலும், இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த, 2017-ம் ஆண்டு இதேபோன்ற ஒத்திகை நிகழ்ச்சியை கோவையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் தேசிய பாதுகாப்பு படையினர் நிகழ்த்தினர்.