கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் ஏசுராஜ் குடும்பத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அப்போது அவர் மத்திய மாநில அரசுகள் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் ஏசுராஜ் குடும்பத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அப்போது அவர் மத்திய மாநில அரசுகள் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் ஏசுராஜ். இவர் இருகூர் பகுதியில் தனியாக இன்ஜினீயரிங் தொழிற்கூடம் நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் போதுமான ஜாப் ஆர்டர் கிடைக்காததால் ஏசுராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த ஏசுராஜ் கடந்த 28-ஆம்தேதி தனது நிறுவனத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுயமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோடு தொழில் துவங்கியவரின்வாழ்க்கையை கொரோனா பேரிடர் புரட்டிப்போட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கோவை மாவட்ட தொழில்முனைவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மறைந்த ஏசுராஜ் மனைவி சுகுணாதேவி, அவரது தாயார் மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசும்போது, `கொரோனா பேரிடர் காலத்தையொட்டிய ஊரடங்கில் சொந்த ஊரில் உள்ள தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சிறு குறு தொழில்முனைவோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஏசுராஜின் தற்கொலையே சாட்சியாக உள்ளது.
மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள், கடன் தள்ளுபடி அறிவித்து வழங்குகிறது. ஆனால் சிறு, குறு தொழில்களை மட்டும் அம்போவென விட்டுவிட்டது. இதன் காரணமாகவே இதுபோன்ற துயரங்கள் ஏற்பட்டுள்ளன. ஏசுராஜ் போன்ற தொழில்முனைவோரின் தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தல் காலத்தையொட்டி தொழில்முனைவோரைச் சந்தித்து அக்கறையுள்ளவர்கள்போல் நடிப்பதற்கு மாறாக இப்போதாவது மத்திய மாநில அரசுகள் சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், வங்கிக் கடன் தள்ளுபடி, வங்கி தவணை காலம் நீட்டிப்பு போன்ற தொழில்முனைவோரின் கோரிக்கைகளை செவிகொடுத்து நிறைவேற்றிட வேண்டும். இதுவே லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். சிறு, குறு தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும்' என்றார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனான சந்திப்பில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், கட்சி நிர்வாகிகள் ஜோதிபாசு, பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.